தெருநாய்கள் விவகாரம்.. மையங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
உச்ச நீதிமன்றம் தெருநாய்கள் விவகாரத்தில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தெருநாய்கள் தாக்குதலால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெருநாய்களை மறுவாழ்வு மையங்களில் அடைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறது.
தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு நாய்கள் தாக்குதலால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 3ம் தேதி வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆங்காங்கே நாய்களுக்கு உணவு வைக்கும் சூழலை காண முடிவதாகவும் இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக சில வழிகாட்டு நெறிமுறைகளை உத்தரவாக பிறப்பிக்க உள்ளோம் என்றும் கூறி வழக்கை நேற்றைய தினத்திற்கு ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு இவ்வழக்கில் நேற்று கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், மாநிலங்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இது இந்த உத்தரவின் ஒரு பகுதியாக இருக்கும் எனக் கூறியதோடு நீதிமன்றத்தின் உத்தரவுகள் உறுதியாக பின்பற்றப்படுகிறதா? என்பதை ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து பொதுப்பணித்துறை & நகராட்சி அதிகாரிகள் , சாலை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து உடனடியாக மறுவாழ்வு அளிக்க வேண்டும் என உத்தரவிடுவதாகவும், மாநில அரசுகள் 2 வாரங்களுக்குள் அரசு மற்றும் தனியார் கல்வி சுகாதார நிறுவனங்களை அடையாளம் கண்டு தெரு நாய்கள் நுழைவதை தடுக்க வளாகங்களில் வேலிகள் அமைத்து பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் அனைத்து நிறுவனங்களின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட வளாகத்தை பராமரிப்பதற்காக ஒரு தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றதோடு நாய்கள் நுழையாமல் தடுப்பதற்காக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளதா? என நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகள் உரிய ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விலங்குகளால் ஏற்படக்கூடிய விபத்தை தடுப்பதற்காக நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகள் குறித்து புகார் அளிப்பதற்காக உரிய அவசர கால எண்ணை (Emergency Toll-Free Number) ஏற்படுத்த வேண்டும் என்றதோடு மாவட்ட மருத்துவமனைகள், பொது விளையாட்டு வளாகங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களையும் இரண்டு வாரங்களுக்குள் மாநில அரசுகள் அடையாளம் காண வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
குறிப்பிட்ட இடங்களில் தெரு நாய்கள் நுழைவதை தடுக்க தேவையான அளவு வேலி அமைத்து வளாகங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றதோடு இந்த பணிகளை 8 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அரசு வளாகங்களில் சுற்றி திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்ட பிறகு மறுவாழ்வு மையங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்றதோடு, தெரு நாய்களை பிடித்த அதே பகுதியில் மீண்டும் விடக்கூடாது.. அப்படி செய்தால் அது மொத்த நோக்கத்தையும் தோல்வி அடையச் செய்யும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

