மேற்கு வங்கம் | S.I.R. பணிக்கு நீதிபதிகள் நியமனம்.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!
மேற்கு வங்க எஸ்.ஐ.ஆர் நடைமுறையை மேற்கொள்ள நீதிபதிகளை நியமித்து, உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அம்மாநில எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் பரஸ்பர குற்றச்சாட்டுகள், அவர்களுக்கு இடையேயான நம்பிக்கையின்மையை காட்டுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தியத் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு முதற்கட்டமாகத் தொடங்கப்பட்ட இப்பணி, 2ஆவது கட்டமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, வாக்களர்களின் வீடுகளுக்கே சென்று எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு பெறப்பட்டன. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்களர் பட்டியல் திருத்தத்திற்குப் பிறகு, வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளி்யிடப்பட்டு வருகிறது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் இருந்து 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேலும் 1 கோடிக்கும் மேலான வாக்காளர்களிடம் ஆவணங்களை தேர்தல் ஆணையம் கோரியது.
இதனை எதிர்த்து மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணி தொடா்பாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பலா் தாக்கல் செய்த மனுக்கள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்ஐஆா் பணிக்காக மிகவும் தகுதிவாய்ந்த அதிகாரிகளை மாநில அரசு அனுப்பவில்லை என்று தோ்தல் ஆணையம் குற்றஞ்சாட்டியது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “மேற்கு வங்க எஸ்ஐஆா் விவகாரத்தில் மாநில அரசுக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் இடையே போதிய ஒத்துழைப்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒருவா் மீது மற்றொருவா் பழி சுமத்துவது இருதரப்புக்கும் இடையே அவநம்பிக்கை இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. மாநில அரசுக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நிலவும் அவநம்பிக்கை காரணமாக, அந்தப் பட்டியலில் சோ்க்கப்பட்டவா்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களைப் பெறும் கட்டத்தில் எஸ்ஐஆா் பணி தேங்கியுள்ளது. எனவே அந்தப் பணியில் சில மாவட்ட அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதிகளைப் பணியமா்த்த வேண்டும் என்று கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜய் பாலிடம் கேட்டுக்கொள்கிறோம். அதேவேளையில், அந்தப் பணியில் ஈடுபடுத்த முன்னாள் மாவட்ட நீதிபதிகளைக் கண்டறியுமாறும் சுஜய் பாலிடம் கோருகிறோம்.
இந்த விவகாரத்தில் வேறு வழியின்றியும், மாநில அரசு மற்றும் தோ்தல் ஆணையம் ஒப்புக்கொண்டதாலும் மாவட்ட நீதிபதிகளைப் பணியமா்த்துமாறு கோரியுள்ளோம். இந்த நீதிபதிகளுக்குத் தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்பை மாநிலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளா்கள் அளிக்க வேண்டும். எஸ்ஐஆா் பணியில் ஈடுபட உள்ள நீதிபதிகள், அந்தப் பணி தொடா்பாகப் பிறப்பிக்கும் உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளாகக் கருத வேண்டும்” என்று உத்தரவிட்டனர். 28ஆம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலை வெளியிட ஆணையிட்ட நீதிபதிகள், தனியாக கூடுதல் வாக்காளர் பட்டியலை வெளியிடவும் அனுமதியளித்தனர். முன்னதாக, இதுதொடர்பான வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தானே நேரில் ஆஜராகி வாதாடினார். இதன்மூலம் இந்திய வரலாற்றிலே முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடும் முதல் முதலமைச்சர் என்ற பெயரை பெற்றார்.

