S.I.R. வரைவுப் பட்டியல் | 3 மாநிலங்கள்.. 1 யூனியன் பிரதேசம்.. 95 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!
மூன்று மாநிலங்கள் மற்றும் ஒருயூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து, வரைவு வாக்காளர்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், சுமார் 95 லட்சம் வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
S.I.R. 2.0 வாக்காளர் திருத்தப் பணிகள்
இந்தியத் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு முதற்கட்டமாகத் தொடங்கப்பட்ட இப்பணி, 2ஆவது கட்டமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, வாக்களர்களின் வீடுகளுக்கே சென்று எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு பெறப்பட்டன. தொடர்ந்து, டிசம்பர் 4ஆம் தேதி எஸ்.ஐ.ஆர் பணிகளின் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 14 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் கொடுத்திருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்களர் பட்டியல் திருத்தத்திற்குப் பிறகு, வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளி்யிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி, குஜராத், மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்குப் பிறகு தற்போது மத்தியப் பிரதேசம், கேரளா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு யூனியன் பிரதேசத்திலும் வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 42.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
அதன்படி, மத்தியப் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 42.74 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் இடம்பெயர்ந்த வாக்காளர்கள் 31.51 லட்சம் பேர் எனவும், இறந்த வாக்காளர்கள் 8.46 லட்சம் பேர் எனவும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 2.77 லட்சம் பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில், திருத்தத்திற்கு முன்பு 5.7 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 5.3 கோடியாகக் குறைந்துள்ளது. அதேபோல் சத்தீஸ்கரில் 27 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 19,13,540 வாக்காளர்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும், 6,42,234 பேர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,79,043 பேர் பல இடங்களில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 24.08 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
அதேபோல் கேரளாவில் 24.08 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின்படி, நீக்கப்பட்ட பெயர்களில் 6,49,885 பேர் இறந்த வாக்காளர்கள் எனவும் 14,61,769 பேர் இடம்பெயர்ந்த வாக்காளர்கள் எனவும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்த வாக்காளர்கள் 1,36,029 பேர் எனவும் தெரிவித்துள்ளது. அடுத்து அந்தமான் நிகோபார் தீவு யூனியன் பிரதேசத்தில், 64,014 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 9,191 வாக்காளர்கள் (2.96%) இறந்தவர்களாகவும், 51,906 வாக்காளர்கள் (16.72%) இடம்பெயர்ந்தவர்களாகவும் 2,917 வாக்காளர்கள் (0.94%) பல இடங்களில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்களும், மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களும், புதுச்சேரியில் 85,531 பேர் வாக்காளர்களும் குஜராத்தில் 74 லட்சம் வாக்காளர்களும் ராஜஸ்தானில் 42 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

