S.I.R. திருத்தம் | மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. தேர்தல் ஆணையம் தகவல்!
சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் மூலம், மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு முதற்கட்டமாகத் தொடங்கப்பட்ட இப்பணி, 2வது கட்டமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்காளத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்டுள்ளது. இதில், 58 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மொத்தம் 58,20,898 வாக்காளரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் 24,16,852 வாக்காளர்கள் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடுத்து,19,88,076 வாக்காளர்கள் இடம்பெயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 12,20,038 வாக்காளர்கள் காணாமல் போனதாகவும் 1,38,328 பெயர்கள் நகல், தவறான அல்லது போலியான உள்ளீடுகளாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், பிற காரணங்களால் 57,604 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீக்கப்பட்டவர்கள், தங்கள் கோரிக்கைகளை படிவம் 6இன் மூலம் துணை ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பிப்ரவரி 14, 2026 அன்று, வெளியிடப்படும்.
முன்னதாக எஸ்.ஐ.ஆர். நடைமுறையை முழுமையாக எதிர்த்துவரும் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ”சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் மோசடி செய்ய பாஜகவும் தேர்தல் ஆணையமும் சதி செய்கின்றன. வங்காளத்தில் இருந்து மக்களை வெளியேற்ற யாரையும் தனது அரசாங்கம் அனுமதிக்காது. வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டால் மக்கள் தெருக்களில் இறங்க வேண்டும். உங்களது பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டால், மத்திய அரசாங்கமும் நீக்கப்பட வேண்டும்” எனச் சாடியிருந்தார்.
அவருடைய இந்தக் கருத்துக்குப் பதிலளித்திருந்த பாஜக, ”மம்தா பானர்ஜியின் SIR மீதான சீற்றம், சட்டவிரோத குடியேறிகளை உள்ளடக்கிய அவரது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது” எனக் குற்றஞ்சாட்டியிருந்தது.

