”விதிமுறையை கடுமையாக பின்பற்ற வேண்டும்” - தெருநாய் விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நாய்க்கடி தொடர்பான வழக்கில் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவெளியில் சுற்றித் திரியும் விலங்குகளை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் துஷார் மேத்தா, நாய்களைப் பிடித்துச்செல்ல குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக வாதிட்டார். நாய்கள் இருக்க வேண்டுமா.. வேண்டாமா என வளாகக் குடியிருப்புகளில் வாக்குப்பதிவு நடத்தி பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவித்தார். நாய்களை ஆதரிக்கும் பலர், நாளை எருமை மாடுகளை பூங்காக்களுக்கு அழைத்து வரக்கூடும் என்றும் வாதிட்டார். தெருக்களில் திரியும் 2 கோடிக்கும் அதிகமான நாய்கள் பெரும்பாலும் குழந்தைகளை கடிப்பதால் பெற்றோர் பாதிப்படைகின்றனர் என துஷார் மேத்தா வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, ”நாய்கள் எப்போது கடிக்கும், கடிக்காது என கணிப்பது சிரமம், வரும்முன் காப்பதே சிறந்தது” எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், “சாலைகளில் நாய்கள் மற்றும் விலங்குகள் சுற்றிவரக் கூடாது. நாய்கள் கடிக்காவிட்டாலும், அவற்றால் விபத்துகள் நிகழ்கின்றன. நாய்க்கடிகள் மட்டுமின்றி சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகளாலும் மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதனை அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதை கடந்து செல்ல முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், ”தெருநாய்கள் விவகாரத்தில் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கடுமையாக பின்பற்ற வேண்டும்” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலைகளுக்கு தெருநாய்கள் உள்ளிட்ட விலங்குகள் வராமல் தடுக்க தடுப்புகளை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக சில மாநிலங்கள் பதில் அளிக்கவில்லை என்றும், அலட்சியம் காட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
நாய்க்கடி தொடர்பான வழக்கில் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் பதிலளிக்காதது அதிருப்தியளிப்பதாக இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கெளரவ் அகர்வால் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

