பிணை என்பது உரிமை; சிறை என்பது விதிவிலக்கு.. உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?
இந்தியாவில் நிலுவையில் உள்ள சுமார் 5 கோடி வழக்குகளில், 76 சதவீதத்துக்கும் அதிகமானோர் விசாரணைக் கைதிகளாகவே சிறையில் வாடுவது நீதித் துறையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சிறைகளில் நிலவும் அதிகப்படியான நெரிசலைக் குறைக்கவும், காவல் துறையின் தேவையற்ற கைது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், பிரிட்டனைப்போல இந்தியாவுக்கென ஒரு தனி பிணைச் சட்டத்தை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் தற்போதைய நடைமுறைப்படி, பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் பிணைத் தொகையைச் செலுத்த முடியாமல் நீண்டகாலம் சிறையிலேயே இருக்கும் சூழல் நிலவுகிறது. டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில், பல ஆண்டுகளாக சிறையில் இருந்த குல்பிஷா பாத்திமா உள்ளிட்ட ஐந்து பேருக்கு கடந்த ஜனவரி 5ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. விசாரணையில் ஏற்படும் அதீத தாமதம் ஒருவரின் அடிப்படை உரிமையான உயிர் வாழும் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை பறிப்பதாக அமையும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்டாலும், விசாரணை முடிவற்ற காலம் வரை இழுத்தடிக்கப்படும்போது பிணை வழங்குவதை நீதிமன்றங்கள் தவிர்க்கக் கூடாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆகவே, குற்றம் நிரூபிக்கப்படும்வரை எவரும் குற்றவாளி அல்ல என்ற ஜனநாயக மாண்பைக் காக்க, ஒரு வலுவான பிணைச் சட்டம் இந்தியாவுக்கு இன்றைய அவசரத் தேவையாக உள்ளது என்பதே நிபுணர்களின் கருத்து.

