கொல்கத்தா | ஐ பேக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. மம்தா பானர்ஜி நேரில் விசிட்!
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசனை நிறுவனமாகச் செயல்பட்டு வரும் ஐ பேக்கின் கொல்கத்தா அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் இன்று காலை சோதனை நடத்தினர்.
மேலும், ஐ-பேக் அமைப்பின் இணை நிறுவனரும் இயக்குநருமான பிரடிக் ஜெயின் இல்லத்திலும் இச்சோதனை நடைபெற்றது. பிரடிக் ஜெயின், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஐடி பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பு ஐ பேக் நிறுவனத்தை பிரடிக் ஜெயினும் பிரஷாந்த் கிஷோரும் இணைந்து தொடங்கியிருந்தனர். ஐ பேக் நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வைத்துள்ள முக்கியமான தரவுகளை கைப்பற்றுவதே அமலாக்கத்துறையின் நோக்கம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் ஐபேக் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடக்கும் தகவல் தெரிந்தவுடன் மம்தா அங்கு நேரில் சென்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆவணங்கள், செயல் திட்டங்கள், வியூகங்கள் மற்றும் தரவுகளை அமலாக்கத்துறை மூலம் கைப்பற்ற அமித் ஷா முனைந்துள்ளதாகவும், இதுபோன்ற உள்துறை அமைச்சர் நாட்டை எப்படிக் காப்பாற்றுவார் என எதிர்பார்க்க முடியும்” எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ’’ஒரு அரசியல் கட்சிகளின் தரவுகளை எடுப்பதுதான் அமலாக்கத்துறையின் பணியா?’’ எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமலாக்கத்துறை விளக்கம்!
நிலக்கரி ஊழல் மற்றும் சட்டவிரோதமாக நிலக்கரி கடத்தியது உள்ளிட்ட வழக்குகளில், ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடக்கிறது. உள்நோக்கத்துடன் எந்தக் கட்சியையும் குறித்து இந்தச் சோதனை நடத்தப்படவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படவில்லை என்றும் ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தியதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

