ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர் மகன் மரணம்.. 75% வருமானத்தை சமூக நலனுக்கு செலவு செய்ய முடிவு!
தனது மகனின் மரணத்தைத் தொடர்ந்து, அவனது நினைவாக தங்கள் வருமானத்தில் 75 சதவீதத்தை சமூக நலத்திற்காக செலவிட உள்ளதாக பிரபல தொழிலதிபர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இருந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தொழிலதிபர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால் விபத்து ஒன்றில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 49 வயதான அவர் பனிச்சறுக்கு போட்டியின்போது அடிபட்டு சிகிச்சை பெற்றுவந்தார். உடல்நலம் மீண்டு வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தன்மகன் இறப்பு குறித்து தெரிவித்துள்ள அனில் அகர்வால், இது தன்வாழ்க்கையின் இருண்ட காலம் என்று கூறியுள்ளார். மகன் நினைவாக தங்கள் வருமானத்தில் 75 சதவீதத்தை சமூக நலத்திற்காக செலவிட உள்ளதாக அனில் அகர்வால் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன் குழந்தைக்கு விடை கொடுக்க வேண்டிய ஒரு பெற்றோரின் வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு மகன் தன் தந்தைக்கு முன்பாக இந்த உலகை விட்டுச் செல்லக்கூடாது. இந்த இழப்பு எங்களை நாங்கள் இன்னும் புரிந்துகொள்ள முடியாத வழிகளில் நொறுக்கிவிட்டது. எந்தவொரு குழந்தையும் பசியுடன் தூங்கக்கூடாது, எந்த குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படக்கூடாது, ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும், ஒவ்வொரு இளம் இந்தியருக்கும் அர்த்தமுள்ள வேலை இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கனவை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். நாம் சம்பாதிப்பதில் 75% க்கும் அதிகமானவை சமூகத்திற்குத் திருப்பித் தரப்படும் என்று அக்னிக்கு (மகனுக்கு) நான் உறுதியளித்திருந்தேன். நீ (மகன்) இல்லாமல் இந்தப் பாதையில் எப்படி நடப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் உன் ஒளியை முன்னோக்கி எடுத்துச் செல்ல முயற்சிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். அக்னிவேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இருந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த அக்னிவேஷ் அகர்வால்?
அனில் அகர்வாலின் மூத்த மகனான அக்னிவேஷ், 1976ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி பாட்னாவில் பிறந்தார். அவர் அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற மேயோ கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் தனது கல்வியை முடித்த பிறகு, அக்னிவேஷ் நேரடியாக தனது தந்தையின் நிறுவனத்தில் பணிபுரியாமல் நிறுவனம் பற்றிய பணிகளைப் புரிந்துகொள்வதற்காக அவர் வெளிநாடுகளில் பணிபுரிந்தார்.
இந்த அனுபவம் அவர் இந்தியா திரும்பிய பிறகு, வேதாந்தா குழும நிறுவனங்களில் பணியாற்ற உதவியது. பின்னர், அவர் ஃபுஜைரா கோல்ட் நிறுவனத்தை நிறுவினார். மேலும் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் தலைவரானார். பஞ்சாபின் மிகப்பெரிய தனியார் அனல் மின் நிலையங்களில் ஒன்றான தல்வண்டி சபோ பவர் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலும் அவர் பணியாற்றினார். நிறுவனங்களைத் தவிர்த்து அவர் ஓர் இசைக்கலைஞராகவும், விளையாட்டு வீரராகவும் மிளிர்ந்தார்.

