தேர்தல் பத்திரம் | SBI Vs SC | 4 சட்டத்திருத்தங்கள்.. வாரிவழங்கிய நிறுவனங்கள்.. இதுவரை நடந்தது என்ன?

எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.
உச்ச நீதிமன்றம், எஸ்பிஐ
உச்ச நீதிமன்றம், எஸ்பிஐபுதிய தலைமுறை

நாட்டை தற்போது பரபரப்பின் உச்சாணிக்கொம்பில் போய் நிறுத்தியிருக்கிறது தேர்தல் நிதிப்பத்திர விவகாரம். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின், எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.

லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின்
லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின்முகநூல்

பெருமளவில் அறியப்பட்ட நிறுவனங்களில் ஏதேனும் ஒரு நிறுவனம்தான் அதிகளவில் தேர்தல் பத்திரங்களின் மூலமாக நிதி வழங்கி இருக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் முன்னணியில் இருப்பது லாட்டரி மன்னன் என அறியப்படும் சந்தியாகு மார்ட்டின் என்பவரது Future Gaming and Hotel Services Private Limited நிறுவனம்.

உச்ச நீதிமன்றம், எஸ்பிஐ
தேர்தல் பத்திரம் விவகாரம் - அதிகபட்சமாக வாங்கிய கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபர்!

தேர்தல் நிதிப்பத்திரம் என்பது என்ன?

தேர்தல் நிதிப்பத்திரம் என்பது, இந்தியாவின் எந்த ஒரு குடிமகனும் அல்லது நிறுவனமும் அங்கீகரிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கிகளின் கிளைகளில் இருந்து, தேர்தல் நிதிப்பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு வரைமுறை.

இதன் மூலம் ரூ.1000, ரூ. 10 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி என பல வகைகளில் நிதிப்பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். 2017 ஆம் ஆண்டு இத்திட்டத்தை மத்திய அரசு அறிவித்த நிலையில், 2018 ஜனவரி 29 ஆம் தேதி அரசால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.

தேர்தல் பத்திரம்
தேர்தல் பத்திரம்முகநூல்

2017-18 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டின்போது நிறைவேற்றப்பட்ட நிதிச் சட்டம் 2017ன் படி, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெறும் வரைமுறை கொண்டுவரப்பட்டது.

- மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951,

- வருமான வரி சட்டம் 1961,

- நிறுவனங்கள் சட்டம் 2013,

- வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்கு முறைச் சட்டம் 2010

ஆகிய நான்கு சட்டங்களில் மேற்கொண்ட சட்டத்திருத்தங்களின் மூலம் தேர்தல் நிதிப்பத்திரம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

சட்டங்களில் கொண்டுவரப்பட்டத் திருத்தம்

Companies Act, 2013 - இந்த சட்டத்தின்படி, ஓர் நிறுவனம் முந்தைய மூன்று நிதியாண்டுகளில் சம்பாதித்த நிகர லாபத்தில், அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கும் நன்கொடை 7.5%க்கும் அதிகமாக இருக்கக்கூடாது. அதேபோல், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் முதல் மூன்று நிதியாண்டுகளுக்குள் அரசியல் பங்களிப்பை செய்வதை இச்சட்டம் தடைசெய்யும்.

அரசியல் கட்சிகளுக்கு நிதிப் பங்களிப்பை செய்ய நினைக்கும் நிறுவனங்கள், முதலில் அதன் இயக்குநர் குழு கூட்டத்தில், நிதி வழங்குவது குறித்து அங்கீகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். நிறுவனங்கள் ஆண்டுதோறும், தாங்கள் அளித்துள்ள நிதி, எந்த கட்சிக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்ற தகவல்களையும் வெளியிட வேண்டும்.

ஆனால் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம் 2018 மூலம், Companies Act 2013ன் 7.5% சதவீத வரம்புடன் நிதி வழங்கும் முறை நீக்கப்பட்டது. நிறுவனம் லாபகரமானதா இல்லையா என்பதெல்லாம் இதில் தேவையில்லை. அதேபோல் தாங்கள் நிதி வழங்கிய அரசியல் கட்சிகளின் பெயர்களையும் வெளியிட வேண்டியதில்லை. தேர்தல் பத்திரம் மூலமாக நன்கொடை அளிப்பவர்களது பெயர் வங்கிக்கு மட்டுமே தெரியும்.

வருமான வரிச் சட்டம் 1961 - ன் படி, அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைகள் குறித்து வருமானவரித்துறையினரிடமும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951- ன் படி, ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் அரசியல் கட்சிகள் பெறும் நிதி குறித்த தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்ற முறை திருத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு முன்னதாக ரூ.20 ஆயிரத்திற்கும் அதிகமாக பெறும் அனைத்து நன்கொடைகளையும் வெளியிடவேண்டும் என்ற நடைமுறை இருந்தது.

முன்னதாக 2017 ஆம் ஆண்டு தேர்தல் நிதிப்பத்திரம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருந்தது. அதில், “தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்படும் நன்கொடைகள் குறித்து அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29 Cல் திருத்தம் கொண்டுவரப்பட்டது பிற்போக்கு நடவடிக்கை” என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் ஆணையம் நோட்டீஸ்முகநூல்

இந்த திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதார விசாரணை, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 15 உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தங்கள் அனைத்தையும் ரத்து செய்தும் உத்தரவிட்டது. மேலும், தேர்தல் பத்திரங்களை யார் வாங்கியது? யார் பணமாக்கியது? உள்ளிட்ட விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது.

மேலும், “தேர்தல் பத்திர முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாக்காளர்களுடைய உரிமையைப் பறிக்கிறது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. நன்கொடை கொடுத்தோர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் தங்கள் இணையதளத்தில் மார்ச் 13-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றம், எஸ்பிஐ
‘தேர்தல் பத்திர திட்டம்’ என்றால் என்ன? இதிலுள்ள பிரச்னைகள் என்னென்ன? விரிவான அலசல்!

கால அவகாசம் கேட்ட எஸ்பிஐ; ஏற்காத உச்சநீதிமன்றம்

ஆனால், மார்ச் 4 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த எஸ்பிஐ, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அளிக்க ஜூன் 30 ஆம் தேதிவரை கால அவகாசம் கோரியிருந்தது.

கால அவகாசம் கோரிய மனுவில், தேர்தல் பத்திரங்கள் வழங்கியது மற்றும் பணமாக்குவது தொடர்பான தரவுகள் இரண்டு வெவ்வேறு இடங்களில் உள்ளது. பத்திரங்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் டிஜிட்டல் வடிவிலும், வாங்கியவர்கள் பற்றிய தரவுகள் ஆவணங்கள் வடிவிலும் வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்திருந்தது.

state bank of india
state bank of indiaShutterstock

இதை எதையும் ஏற்காத உச்சநீதிமன்றம், எஸ்பிஐயின் மனுவை நிராகரித்தது. மேலும், மார்ச் 12 ஆம் தேதிக்குள் விவரங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எஸ்பிஐ சமர்பிக்கும் விபரங்களை மார்ச் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம், எஸ்பிஐ
“நாளை மாலைக்குள் வேண்டும்...” - SBI-ஐ கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம்

தகவல்களைக் கொடுத்த தேர்தல் ஆணையம்

இதனை அடுத்து கடந்த 12 ஆம் தேதி எஸ்பிஐ இது குறித்தான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது. தேர்தல் பத்திரம் தொடர்பான ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ்குமார் காரா, உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

2019 ஏப்ரல் மாதத்திலிருந்து 2024 பிப்ரவரி 15 ஆம் தேதி வரை, தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, தேர்தல் பத்திரம் வாங்கப்பட்டவரின் பெயர் மற்றும் தேர்தல் பத்திர மதிப்பு உள்ளிட்டவை அடங்கிய ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

2019 ஏப்ரல் 1 முதல் 2024 பிப்ரவரி 15 வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு அதில் 22,030 தேர்தல் பத்திரங்கள் கட்சிகளால் பணமாக்கி கொள்ளப்பட்டுள்ளதாக எஸ்பிஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றம், எஸ்பிஐ
2019 - 24 | 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை... 10 நாளில் 3,346... முழு விவரங்களையும் அளித்த SBI!

2019ம் ஆண்டில் ஏப்ரல் 1 முதல் 11 வரை 3,346 தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி விற்பனை செய்துள்ளது, அதில் 1,609 தேர்தல் பத்திரங்களை கட்சியினர் பயன்படுத்திக் கொண்டு வங்கியில் செலுத்தி பணமாக மாற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் 2024 பிப்ரவரி 15ம் தேதி வரை, 18,871 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இதே காலகட்டத்தில் 20,421 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 2019 ஏப்ரல் பதினொன்றாம் தேதிக்கு முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் 15 நாட்கள் செல்லுபடி ஆகும் என்ற கணக்கின்படி 2019 ஏப்ரல் 12ம் தேதிக்கு பிறகு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது என்பதால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

இந்நிலையில் மார்ச் 15 தேதி தேர்தல் ஆணையம் எஸ்.பி.ஐ கொடுத்த தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் விபரங்கள் இடம்பெற்றிருந்தன.

நன்கொடை பெற்ற கட்சிகளின் விபரம்

பாஜக
பாஜக twitter

தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெற்ற கட்சிகளில் முதல் இடத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளது.

அக்கட்சி 2017-18 ல் 210 கோடி ரூபாய் நிதியாக பெற்றுள்ளது. 2019-20 ல் 2 ஆயிரத்து 555 கோடி பெற்ற நிலையில், 2022-23 ல் 1294 கோடி ரூபாய் நிதியாக பெற்றுள்ளது.

அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இக்கட்சி 2017- 18 ல் 5 கோடி ரூபாய் பெற்ற நிலையில், 2018, 19 ல் 383 கோடி ரூபாயை நிதியாக பெற்றுள்ளது. 2022-23 ல் காங்கிரஸ் பெற்ற தேர்தல் நிதி 171 கோடி ரூபாயாக இருக்கிறது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 2021-22 ல் 528 கோடி ரூபாயும், 2022- 23 ல் 325 கோடி ரூபாயும் தேர்தல் நிதியாக பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 2018-19 ல் 29 கோடியும் 2019-20 ல் 21 கோடியும், 2021-22 ல் 14 கோடி ரூபாயும் தேர்தல் நிதியாக பெற்றுள்ளது.

kcr
kcrpt web

முன்பு TRS ஆகவும் தற்போது BRS ஆகவும் உள்ள சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி 2018-19 ல் 142 கோடியும், 2021-22 ல் 153 கோடி ரூபாயும் நிதியாக பெற்றுள்ளது. பிஜூ ஜனதா தள் கட்சி 2018-19 ல் 214 கோடி ரூபாயை தேர்தல் நிதியாக பெற்ற நிலையில், 2021-22 ல் 291 கோடி ரூபாயும், 2022-23 ல் 152 கோடி ரூபாயும் நிதியாக பெற்றுள்ளது.

திமுகவை பொறுத்தவரை 2017-18 மற்றும் 2018-19 ல் தேர்தல் நிதி பெறவில்லை. 2019 -20 ல் 46 கோடி ரூபாயும், 2021-22 ல் 306 கோடி ரூபாயும் தேர்தல் நிதியாக பெற்றுள்ளது. 2022- 23 ல் 185 கோடி ரூபாயை தேர்தல் நிதியாக பெற்றுள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை 2019-20 ல் மட்டும் 6 கோடி ரூபாயை தேர்தல் நிதியாக பெற்றுள்ளது.

பெரு நிறுவனங்களைத் தாண்டி நிதி கொடுத்த மார்ட்டின் 

இப்போதுதான் வருகிறார் சந்தியாகு மார்ட்டின். அதிக நிதிகளை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக கொடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இவர்தான். இவரது Future Gaming and Hotel Services Private Limited நிறுவனம்தான் ரூ.1368 கோடிரூபாய் அள்ளிக் கொடுத்து, நன்கொடை கொடுத்தவர்களது பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.966 கோடியும் கொடுத்துள்ளன.

லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின்
லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின்முகநூல்

இதேபோல தேர்தல் பத்திரம் மூலம் குணல் குப்தா என்பவர் குறைந்த தொகையாக ரூ.1000 நன்கொடையாக வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி தலைமை தேர்தல் ஆணையம் உச்ச்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திர சூட் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி, தேர்தல் பத்திரங்களின் சீரியல் நம்பர் தொடர்பாக கேள்விகளை எழுப்பினார்.

உச்ச நீதிமன்றம், எஸ்பிஐ
“தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை?” - உச்சநீதிமன்றம் கேள்வி!

அதேசமயத்தில் தேர்தல் பத்திரங்கள் எண்கள் சம்பந்தமான விபரங்களையும் வெளியிட வேண்டுமென்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையையும் பிப்ரவரி 18 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது. அதேசமயத்தில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை சீலிட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் ஒப்படைத்தது தேர்தல் ஆணையம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com