ஊரக வேலை திட்ட மசோதா தாக்கல் | எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.. மாநிலங்களுக்கு ரூ.36,000 கோடி நிதி சுமை!
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை மாற்றும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
மக்களவையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக புதிய வேலைவாய்ப்பு திட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பழைய சட்டத்துக்கு மாற்றாக வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்பு சட்ட மசோதாவை மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தாக்கல் செய்தார். புதிய மசோதாவின்படி, வேலைநாட்கள் 125 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. அதேசமயம், மத்திய அரசின் நிதிப் பகிர்வு குறைக்கப்பட்டு,மாநிலங்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான், மகாத்மா காந்தி மீது தங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளதாகவும், அவரின் கோட்பாடுகளுக்கு உட்பட்டுதான், இந்த திட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதில் அவமரியாதை என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் குறிப்பிட்ட அவர், பெயரை மாற்றுவதால் அவர் மீதான மரியாதை குறைந்துவிடாது என்றும் தெரிவித்தார்.
மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
விபி ஜி ராம் ஜி என அழைக்கப்படும் இந்த மசோதாவில் கொண்டுவரப்படும் மாற்றங்களுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன. மசோதா தொடர்பாக அவையில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, காந்தி பெயரை நீக்குவதால் யாருக்கு என்ன பலன் என கேள்வி எழுப்பியுள்ளார். மசோதா மீது விரிவாக விவாதிக்க வேண்டியிருப்பதால்,அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றத்துக்கு பிரதமர் மோடியின் வெறுப்பே காரணம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், மகாத்மா காந்தி சிந்தனைகள், ஏழைகளின் உரிமைகள்மீது பிரதமர் மோடிக்கு அதீத வெறுப்புஉள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆட்சிக்கு வந்ததில் இருந்து திட்டத்தை செயலிழக்கச்செய்ய முயற்சித்து வந்த பாஜக அரசு, தற்போது திட்டத்தை ஒழித்துக்கட்ட முயற்சிப்பதாக சாடி உள்ளார். 100 நாள் வேலை திட்டம் கிராமப்புற இந்தியர்களுக்கு உயிர்நாடியாக இருந்துவருவதாக குறிப்பிட்ட அவர், பாஜக அரசின் இந்த மக்கள் விரோத மசோதாவை தொடர்ந்து எதிர்ப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
மசோதாக்களின் பெயர்களை இந்தியில் வைப்பது, இந்தி பேசாத மக்களுக்கும், மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் அவமதிப்பு என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுவரை மசோதாவின் பெயர்கள் ஆங்கில பதிப்பில் ஆங்கிலத்திலும், இந்தி பதிப்பில் ஹிந்தியிலும் எழுதும் நடைமுறை இருக்கும்போது, அதில் திடீரென மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.
மாநிலங்களுக்கு ரூ.36,000 கோடி நிதி சுமை
இதனைத் தொடர்ந்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர், நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியின் புகைப்படத்துடன் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச்சட்டத்துக்கு மாற்றாக, தற்போது மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் விக்ஷித் பாரத் வேலைவாய்ப்பு,வாழ்வாதாரத்துக்கான உத்தரவாதத் திட்டத்தால் மாநில அரசுகளுக்கு 36ஆயிரம் கோடி ரூபாய் நிதி சுமை ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய செலவுகளுக்கான நிதியை மத்திய அரசே முழுமையாக வழங்கியது. ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் புதிய மசோதாவின்படி, ஊதிய செலவினங்களுக்கு மத்திய அரசு வெறும் 60 சதவீதம் மட்டுமே நிதிவழங்கும். மீதுமுள்ள 40 சதவீத நிதியை மாநில அரசுகள் வழங்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள 100 நாள் வேலை திட்டத்துக்கு மத்திய அரசு சராசரியாக ஆண்டுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. புதிய மசோதாவின்படி, மாநிலங்கள் 40 சதவீதம் நிதி வழங்க வேண்டும் என்பதால், மாநிலங்களுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் நிதி சுமை ஏற்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்துக்கு ஆண்டுக்கு 4,300 கோடி ரூபாய் நிதி சுமை ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
11 ஆண்டுகளில் 25 மத்திய அரசு திட்டங்கள் பெயர் மாற்றம்
இதற்கிடையே, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் திட்டங்கள், அமைச்சகங்கள், சாலைகள், நகரங்கள் என பல பெயர்கள் மாற்றம் கண்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 25 திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இது தவிர மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர் கல்வி அமைச்சகம் என்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் என்றும் மாற்றப்பட்டிருந்தது. பிரதமர் வீடுஅமைந்திருக்கும் தெருவின் பெயரும் ‘லோக் கல்யாண் மார்க்’ என மாற்றப்பட்டுள்ளது. டெல்லி ராஜ்பத், கர்தவ்ய பாத் என மாற்றப்பட்டது. ஆளுநர் மாளிகைகளின் பெயர் ராஜ்பவன் என்பதிலிருந்து லோக் பவன் என மாற்றப்பட்டுள்ளது. இது தவிர அலகாபாத், அவுரங்காபாத், ஓஸ்மானாபாத் என பல ஊர்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.

