SIR | பாஜக வாக்காளர்களுக்கும் சிக்கலா? அடுத்தடுத்த திட்டங்களில் மும்முரமாகும் NDA கூட்டணி!
பிஹாரில் ராகுல் காந்தியின் ‘வாக்காளர் அதிகார் யாத்திரைக்கு பெரும் கூட்டம் கூடிவருகிறது. இதை எதிர்கொள்ள பாஜகவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் புதிய தேர்தல் யுக்திகளைப் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
பிஹார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார் யாத்திரையானது பெரும் கூட்டத்தை ஈர்த்திருக்கிறது. இந்த யாத்திரையில், ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் உடன் இணைந்து, ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக மீது "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகளை தீவிரமாக முன்வைத்து வருகிறார். INDIA கூட்டணியின் மிக முக்கியத் தலைவர்களும், எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் ராகுலின் யாத்திரையில் பங்கேற்று வருகின்றனர். இந்த யாத்திரையில் ராகுலின் தங்கையும் வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தி பங்கேற்றார். அதேபோல், தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி போன்றோரும் பிஹாருக்குச் சென்று யாத்திரையில் பங்கேற்றது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் ராகுலின் யாத்திரைக்கு கவனத்தை ஈர்த்துத் தந்துள்ளது.
இது INDIA கூட்டணியின் ஆதரவுத் தளத்தை மேலும் பலப்படுத்தக்கூடும் என பிஹாரில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக கவலை கொண்டுள்ளது. பிஹாரில் பெரும் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்திருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தால் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடியவர்களும் தமது வாக்குரிமையை இழந்திருக்கக்கூடும் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் அஞ்சுகின்றனர்.
இந்தச் சூழலில், பாஜக தனது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முக்கியத் தலைவர்களைக் கொண்டு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமாரின் தூய்மையான மற்றும் நேர்மையான பிம்பம், தேர்தலுக்கு முந்தைய களப்பணியில் எந்தவொரு பாதிப்பையும் தடுக்கும் என்று பாஜக நம்புகிறது.
இருப்பினும், மாநில பாஜக தலைவர் திலிப் குமார் ஜெய்ஸ்வால், துணைமுதல்வர் சாம்ராட் சௌத்ரி மற்றும் மங்கள் பாண்டே ஆகியோர் மீது, ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள், குறிப்பாக ஆம்புலன்ஸ் வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள், பாஜகவின் "ஊழலற்ற ஆட்சி" என்ற பிம்பத்துக்கு சேதம் விளைவித்துள்ளதாக பிஹார் பாஜகவினர் கவலை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சவால்களை எதிர்கொள்ள, பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தேசிய செய்தித் தொடர்பாளர்களைக் கொண்டு மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் பத்திரிகையாளர் சந்திப்புகளையும், 243 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்களைச் சென்றடையும் பிரச்சார கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள், மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலைப்படுத்தி, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை நீர்க்கச் செய்யும் என்று பாஜக கருதுகிறது.
இந்தக்கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் கொடிகளும் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒற்றுமையை வலுவாக முன்னிறுத்துவதன் மூலம் ராகுலுக்குக் கிடைத்திருக்கும் ஆதரவு தங்களின் வெற்றிவாய்ப்பை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்று பாஜக நம்புகிறது.