SIR | அமர்த்தியா சென், முகமது ஷமிக்கு நோட்டீஸ் அனுப்பிய ECI.. சாடிய மம்தா மருமகன்!
பிரபலங்களுக்கு SIR விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு முதற்கட்டமாகத் தொடங்கப்பட்ட இப்பணி, 2ஆவது கட்டமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறையின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் முகமது கைஃப் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியது.
எனினும், அவர் விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருவதால் நேற்றைய தேதியில் அவரால் ஆஜராக முடியவில்லை. இதையடுத்து, வேறொரு தேதிக்கு அவரை வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவரைத் தவிர, பொருளாதார வல்லுநரும் இந்தியாவுக்காக நோபல் பரிசு வென்றவருமான அமர்த்தியா சென், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும் நடிகருமான தேவ், அனிர்பன் பட்டாச்சார்யா, கௌஷிக் பானர்ஜி மற்றும் லபோனி சர்க்கார் ஆகியோருக்கும் SIR விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரபலங்களுக்கு SIR விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர், “SIR என்ற பெயரில், BJP-ECI கூட்டணி வங்காள மக்களை குறிவைக்கிறது. நான் இங்கு வந்தபோது, நமது நாட்டிற்கு உலகளாவிய அங்கீகாரத்தைக் கொண்டு வந்த நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னுக்கு விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அறிந்தேன். இது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் நாட்டை வளப்படுத்தி உலக அரங்கில் மேலும் பிரபலமாக்கினார்.
நாட்டின் பெருமை மற்றும் அதன் மரியாதையைப் பெற்ற அமர்த்தியா சென் போன்ற ஒருவர் எப்படி SIR விசாரணைக்கு அழைக்கப்பட்டார்? அடுத்து, உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும் அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பிரபல நடிகர் தேவ்வுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். இது அனைவரையும் இழிவுபடுத்தவும் துன்புறுத்தவும் செய்யும் முயற்சி" என அவர் கடுமையாகச் சாடினார். இருப்பினும், அமர்த்தியா சென் குறித்த அபிஷேக் பானர்ஜியின் கருத்துக்கு தேர்தல் ஆணையம் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

