SIR | முகமது ஷமிக்கு அடுத்த சிக்கல்.. சம்மன் அனுப்பிய தேர்தல் ஆணையம்!
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறையின் ஒரு பகுதியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு முதற்கட்டமாகத் தொடங்கப்பட்ட இப்பணி, 2ஆவது கட்டமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, வாக்களர்களின் வீடுகளுக்கே சென்று எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு பெறப்பட்டன. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்களர் பட்டியல் திருத்தத்திற்குப் பிறகு, வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளி்யிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறையின் ஒரு பகுதியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் முகமது கைஃப் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியது. தெற்கு கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பகுதியில் உள்ள கர்ட்ஜு நகர் பள்ளியில்,உதவி தேர்தல் பதிவு அதிகாரி (AERO) முன் இன்று ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் விஜய் ஹசாரே டிராபியில் வங்காள அணியில் விளையாடி வருவதால், திட்டமிடப்பட்ட இன்று விசாரணையில் கலந்துகொள்ள முடியவில்லை என்று பதிலளித்துள்ளார். இதையடுத்து, ஷமியின் அடுத்த விசாரணை ஜனவரி 9 முதல் 11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய வட்டாரங்களின்படி, ஷமி மற்றும் அவரது சகோதரரின் பெயர்கள், அவர்களின் கணக்கெடுப்பு படிவங்களில் உள்ள சிக்கல்கள் காரணமாக விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றன. இந்தப் பிரச்னைகள் சந்ததி மேப்பிங் மற்றும் சுய-மேப்பிங்கில் உள்ள முரண்பாடுகளுடன் தொடர்புடையவை.
உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் முகமது ஷமி பிறந்திருந்தாலும், பல ஆண்டுகளாக அவர் கொல்கத்தாவில் நிரந்தரமாக வசித்து வருகிறார். ராஷ்பெஹாரி சட்டமன்றத் தொகுதியின்கீழ் வரும் கொல்கத்தா மாநகராட்சி (கேஎம்சி) வார்டு எண் 93இல் வாக்காளராக அவர் பதிவு செய்யப்பட்டுள்ளார்

