பிகார் | ஒவ்வொரு தொகுதிக்கும் தனித் தனி தேர்தல் அறிக்கை.. புதிய வியூகத்துடன் காங்கிரஸ்
பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணியும், ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் களத்தில் உள்ளனர். மேலும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் இருக்கிறது. இந்நிலையில், இத்தேர்தலில் மாகாகத்பந்தன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 50 முதல் 55 தொகுதிகளில், பிகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிக்கும் தனி தனி தேர்தல் அறிக்கைகளை வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆகவே, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் தனி தேர்தல் அறிக்கை என பிகார் மாநிலத்தில் குறைந்த பட்சம் 50 தேர்தல் அறிக்கைகளை வெளியிட உள்ளனர்.
மாநிலம் முழுவதற்கும் காங்கிரஸ் கட்சி வழங்கும் தேர்தல் வாக்குறுதிகளை கடந்து, ஒவ்வொரு தொகுதிக்கும் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை அந்தந்த தொகுதியில் பிரச்சனைகளை குறிப்பிட்டு அதை தீர்க்கவும், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விளக்கும் வகையிலும் அமையும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். பிகார் ஒரு பெரிய மாநிலம் என்றும் பல்வேறு பிராந்தியங்களில் வித்தியாசமான பிரச்சனைகள் உள்ளன என்றும் தெரிவிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் தனி தேர்தல் அறிக்கை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை கடந்து "மகாகத்பந்தன்" கூட்டணி பிகார் சட்டமன்ற தேர்தலுக்கு புது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் ராஷ்ட்ரய ஜனதா தளம் மற்றும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் மாநிலத்துக்கான கூட்டணி தேர்தல் அறிக்கையில் என்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பதை விவாதித்து வருகின்றன. வேலையில்லா திண்டாட்டம் மிகவும் முக்கிய பிரச்சனையாக உள்ளது என கருதப்படும் நிலையில், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு, தொழில்துறை முதலீடுகளை ஊக்குவிப்பது மற்றும் கல்வியை மேம்படுத்தும் திட்டங்கள் ஆகியவை வேலையில்லா திண்டாட்டத்தை சரிகட்ட மகாகத்பந்தன் கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகளாக அமையும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த ஒரு வருடமாக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், மகாகத்பந்தன் கூட்டணி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான வலுவான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட வேண்டும் என கட்சி திட்டமிட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.