பிரதமர் மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்.. இந்திரா காந்தியைப் போல் அமெரிக்காவை எதிர்க்க வலியுறுத்தல்!
அமெரிக்க அதிபரை இந்திரா காந்தி போல் உறுதியாக எதிர்த்து நிற்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையை குறிப்பிட்டு, பிரதமர் மோடியை, காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்திய பொருட்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், வரி விதிப்பு நடவடிக்கை தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அவர், பிரதமர் மோடி தன்னுடைய நண்பராக இருந்தாலும், வணிகம் என்று வரும்போது, அவர்கள் நியாயமாக நடந்து கொள்வதில்லை எனக் கூறினார். இந்தியா அமெரிக்காவுக்கு அதிக வரி விதிப்பதாக குறிப்பிட்ட அதிபர் ட்ரம்ப், தற்போது அந்த வரி அளவை குறைக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதுகுறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தவார இறுதிக்குள் வரிவிதிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். இதற்கிடையே, இந்தியா மீதான 25சதவீத வரி விதிப்பால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இதுதொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய நலன்களை பாதுகாக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் நியாயமான, சமமான மற்றும் இருதரப்பும் பலன் பெறும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ”இந்தியாவை அமெரிக்க அதிபர் அவமதித்து வருவதற்கு எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக இருந்தால், இந்தியாவுக்கு பலன்கள் கிடைக்கும் என பிரதமர் மோடி நம்பியதாகவும், அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை” என்றும் கூறி உள்ளார்.
மேலும், “அமெரிக்க அதிபர் ட்ரம்பை இந்திரா காந்தி போல் உறுதியாக எதிர்த்து நிற்க வேண்டும்” என பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் பிரதமர் மோடியின் "ஹவ்டி மோடி" நிகழ்ச்சி பயனற்றதாகிவிட்டது எனவும் அவர் குறிப்பிடட்டார்.