”இன்னும் 10-12 நாட்கள்தான்..” - புதினுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதில் இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக, உக்ரைன் மீது போரை நிறுத்த புடினை ட்ரம்ப் பலமுறை வலியுறுத்தி வருகிறார். அதேநேரத்தில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இடையில் நிறுத்தியிருந்த ட்ரம்ப், அதை மீண்டும் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தவிர, உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பையும் அனுப்ப உள்ளதாகப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், போரை விரும்பாதவர்போல் புடினின் பேச்சுகள் உள்ளதாகவும் ஆனால் அதைச் செயலில் அவர் கடைப்பிடிப்பதில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
"புடின் உண்மையிலேயே பலரை ஆச்சரியப்படுத்தினார். அவர் நன்றாகப் பேசுகிறார். பின்னர் மாலையில் அனைவரையும் தாக்குகிறார். அவர், தான் சொன்னதை புரிந்துகொள்வார் என்று நான் நினைத்தேன். ஆனால், அவர் இரவில் அனைவரையும் குண்டுவீசித் தாக்கி வருவது எங்களுக்குப் பிடிக்கவில்லை. இதுவரை போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 50 நாட்களுக்குள் ஒப்பந்தம் இல்லாவிட்டால், 100% இரண்டாம் நிலை வரிகளை விதிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ”என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்திருந்தும் காத்திருப்பதில் அர்த்தமில்லை. அதிபர் புடினால் நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன். நான் அவருக்கு வழங்கிய 50 நாட்கள் கெடுவை குறைக்கப் போகிறேன். ஏனென்றால் என்ன நடக்கப் போகிறது என்பதற்கான பதில் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைக்கிறேன். உக்ரைன் போர் அமைதி ஒப்பந்தத்தில், கையெழுத்திட புடினுக்கு இன்னும் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இல்லையெனில், பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்” என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.