“சில மாதங்களுக்கு முன்பே விவாகரத்து செய்துவிட்டனர்...” - சானியா மிர்சா குடும்பத்தினர் அறிக்கை

சோயிப் மாலிக் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் குடும்பத்தினர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
சோயிப் மாலிக் திருமணம்
சோயிப் மாலிக் திருமணம்pt web

டென்னிஸ் உலகில் சிறுவயது முதலே தடம்பதித்து எண்ணற்ற சாதனைகளை இந்தியாவிற்கு பெற்றுத் தந்தவர் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா. இவர், கடந்த 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் பெரும் விவாதப்பொருளாக மாறியபோதும், சானியா இந்தியாவுக்காக தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தார். சோயிப் மாலிக்கும் பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில், சானியா மற்றும சோயிப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. எனினும், இதுகுறித்து இருதரப்பினரும் எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. ஆனால், சோயிப் மாலிக்குடன் இருக்கும் புகைப்படங்களை மட்டும், தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தார் சானியா மிர்சா.

முன்னதாக, சோயிப் மாலிக்கும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வைத்திருந்த நீண்டகால பதிவான ‘ஒரு சூப்பர் பெண்மணிக்கு கணவன்’ என்பதைக் கடந்த ஆண்டு நீக்கினார்.

சோயிப் மாலிக் திருமணம்
’திருமணமும் விவாகரத்தும் கடினம்; இதில்’ - வைரலாகும் சானியா மிர்சாவின் இன்ஸ்டா ஸ்டோரி.. காரணம் என்ன?

இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி நடிகை சனா ஜாவேத்தை சோயிப் மாலிக் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தம்பதிகள் பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த மறுநாள் சானியா மிர்சா குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “சானியா எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுப்பார்வையில் இருந்து விலக்கியே வைத்திருந்துள்ளார். சோயிப் மாலிக்கும் சானியா மிர்சாவும் விவாகரத்து செய்திருப்பதை பகிர்ந்து கொள்ளவேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. சோயிப்பின் புதிய பயணத்திற்கு சானியா வாழ்த்து தெரிவிக்கிறார். சானியாவின் இந்த முக்கியமான காலக்கட்டத்தில் அவரது நலம் விரும்பிகளும் அவரது ரசிகர்களும் எந்த விதமான யூகங்களிலும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் அவரது தனியுரிமைக்கான தேவையை மதிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com