பெரியார், டிஎம் கிருஷ்ணா குறித்த மோசமான விமர்சனம் - பாடகர்கள் ரஞ்சனி காயத்ரிக்கு வலுக்கும் எதிர்ப்பு

“பெரியார் போன்ற தலைவரை புகழ்ந்து பாடிய டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்கிய இடத்தில் நாங்கள் பாட விரும்பவில்லை” என ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ரஞ்சனி காயத்ரி - டிஎம் கிருஷ்ணா
ரஞ்சனி காயத்ரி - டிஎம் கிருஷ்ணாpt web

செய்தியாளர் - பாலவெற்றிவேல்

பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதில்லை என கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி காயத்ரி தெரிவித்துள்ளனர். “பெரியார் போன்ற தலைவரை புகழ்ந்து பாடிய டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்கிய இடத்தில் நாங்கள் பாட விரும்பவில்லை” என ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

சங்கீத கலாநிதி விருது...

எம்.எஸ் சுப்புலட்சுமி தொடங்கி மதுரை மணி ஐயர், டிகே பட்டம்மாள், பால சரஸ்வதி, பாலமுரளி கிருஷ்ணா என கர்நாடக இசை உலகில், பெரியபெரிய ஜாம்பவான்கள் பெற்றுள்ள மிகப்பெரிய விருதுதான் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் வழங்கும் சங்கீத கலாநிதி விருது.

கர்நாடக இசை கச்சேரிகளில் கலந்து கொள்ளும் பாடகர்களின் கனவாக விளங்கும் இந்த சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசை பாடகர்களால் ஆஸ்காருக்கு சமமாக கருதப்படுகிறது. மியூசிக் அகாடமி சார்பாக வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருது வருடந்தோறும் சிறந்த இசை கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

ரஞ்சனி காயத்ரி - டிஎம் கிருஷ்ணா
”இது முட்டாள் தனம்” - ‘அன்னபூரணி’ படத்திற்கு ஆதரவாக களத்தில் குதித்த வெற்றிமாறன், டி.எம்.கிருஷ்ணா!

டி எம் கிருஷ்ணா

இந்த ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மியூசிக் அகாடமி செயற்குழு கூட்டத்தில் டிஎம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்குவது குறித்தான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறும் 98வது மார்கழி நிகழ்வில் டிஎம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட உள்ளதாக சென்னை மியூசிக் அகாடமியின் விருது வழங்கும் கமிட்டியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்காக கர்நாடக இசை பாடகர் டி எம் கிருஷ்ணாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

பாடகர் டி எம் கிருஷ்ணா
பாடகர் டி எம் கிருஷ்ணா

பாரம்பரிய கர்நாடக இசை மட்டுமின்றி கர்நாடக இசையின் தனித்துவத்தை மக்கள் மொழியில் பாடுவதில் டி எம் கிருஷ்ணா வல்லவராக திகழ்கிறார். குறிப்பாக கர்நாடக இசை ஆன்மீகத்திற்கும் ஒரு சில ஆராதனைகளுக்கும் இசைக்கப்படும் இசையாக இருக்கும் நிலையில் டிஎம் கிருஷ்ணா முதல்முறையாக கர்நாடக இசையை கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கான இசையாகவும் மாற்றினார். உதாரணத்துக்கு சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இஸ்லாமிய பாடலாக கர்நாடக இசை ராகத்தை பயன்படுத்தி சி ஏ ஏ சட்டத்திற்கு எதிராக பாடினார்.

மேலும் அவர் எழுதிய செபாஸ்டியன் அண்ட் சன் என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொள்ள இருந்தார்.

செபாஸ்டியன் அண்ட் சன்
செபாஸ்டியன் அண்ட் சன்

அந்த சூழலில் திருவான்மையூர் கலா சித்ராவில் நடைபெற இருந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தரமணியில் இயங்கும் ஏசியன் பத்திரிகையாளர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் திருமாவளவன், ப.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ரஞ்சனி காயத்ரி - டிஎம் கிருஷ்ணா
சென்னை: எண்ணூர் பகுதியின் நிலையை பாடலாக பாடிய டி.எம்.கிருஷ்ணா

ரஞ்சனி காயத்ரி சொன்னதென்ன?

இப்படி கர்நாடக இசை உலகில் பல நுணுக்கங்களும் பல முன்னெடுப்புகளும் மேற்கொண்டுள்ள டி எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து கர்நாடக இசை பாடகர்கள் இடையேவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அந்தவகையில் பிரபல கர்நாடக இசை சகோதரிகளான காயத்ரி ரஞ்சனி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறான ஒரு நபருக்கு கர்நாடக இசைக்கான உயரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வருடத்திற்கான 2024 ஆம் ஆண்டுக்கான மியூசிக் அகாடமியின் மாநாட்டில் கலந்துகொள்வதில் இருந்தும், டிசம்பர் 25 அன்று எங்கள் கச்சேரியை வழங்குவதில் இருந்தும் தாங்கள் விலகுவதாக தெரிவித்துள்ளனர். வரும் மார்கழி கச்சேரி டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக இசை சகோதரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு டி எம் கிருஷ்ணாவை பற்றி விமர்சித்து எழுதியுள்ள காயத்ரி ரஞ்சனி சகோதரிகள் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.

ரஞ்சனி காயத்ரி - டிஎம் கிருஷ்ணா
“கடிதத்தின் நோக்கம் குறித்து சந்தேகம்” - ரஞ்சனி காயத்ரி கருத்துக்கு மியூசிக் அகாடமி தலைவர் வருத்தம்

“டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா சுவாமிகள், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். அவரது செயல்கள் ஒரு கர்நாடக இசைக்கலைஞராக இருப்பதில் அவமான உணர்வைப் பரப்ப முயன்றதும் ஆன்மீகத்தை அவர் தொடர்ந்து இழிவுபடுத்துவதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.

‘பிராமணர்கள்’ இனப்படுகொலையை வெளிப்படையாக ஆதரித்த, பிராமண சமூகத்தின் ஒவ்வொரு பெண்ணையும் பலமுறை கேவலமான தகாத வார்த்தைகளால் அழைத்து துஷ்பிரயோகம் செய்த, சொற்பொழிவுகளில் இழிமொழியை இடைவிடாமல் பாடுபட்ட ஈவெரா போன்ற ஒரு நபரை டி எம் கிருஷ்ணா புகழ்வதை கவனிக்காமல் இருப்பது ஆபத்தானது. அற விழுமியங்களைப் புதைத்துவிட்டு மியூசிக் அகாடமியின் கச்சேரியில் கலந்து கொண்டால் நமது ஒழுக்க மீறலுக்கு ஆளாக நேரிடும்” என ரஞ்சனி காயத்ரியின் வலைபக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சனி காயத்ரி - டிஎம் கிருஷ்ணா
”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா

டி எம் கிருஷ்ணாவிற்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பே சங்கீத கலாநிதி விருது வழங்குவதற்கான வாய்ப்புகள் உருவான நிலையிலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது கைவிடப்பட்டு மீண்டும் இந்த வருடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாதிய மற்றும் மதரீதியான அணுகுமுறையில் கர்நாடக இசையை அடக்கும் வகையில் ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது கர்நாடக இசையை ஒரு கட்டுக்குள் சுருக்கும் என்று ரசிகர்கள் பலர் அவர்களை விமர்சித்தும் வருகின்றனர்.

சங்கீத கலாநிதி விருது தனது வாழ்நாள் கனவு என்றும் இதை கொடுத்த அகடமிக்கு தனது நன்றியும் வணக்கமும் என தெரிவித்துள்ள டி.எம் கிருஷ்ணா, சாமானிய மக்களிடம் கர்நாடக இசையை சேர்க்கும் தனது பணி என்றும் தொடரும் என தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 தொற்று நோயால் வருமான இழப்பு ஏற்பட்ட இசைக் கலைஞர்கள் 919 பேருக்கு, டி எம் கிருஷ்ணா சிலருடன் இணைந்து ரூ.32 லட்ச ரூபாய் பணம் திரட்டிக்கொடுத்து உதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஞ்சனி காயத்ரியின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பத்திரிக்கையாளர் ராதிகா சந்தானம், “இந்த கருத்துக்கும், யாராலும் பறிக்க முடியாத டிஎம் கிருஷ்ணாவின் திறமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது கருத்தியல் போராட்டம். நீங்கள் ரஞ்சனி காயத்ரியின் அரசியலை கடந்த ஆண்டுகளில் பின்பற்றி இருந்தால், உங்களுக்கு இது ஆச்சர்யமளிக்காது” என தெரிவித்துள்ளார்.

எழுத்தாளரும் திமுகவின் செய்தித் தொடர்பாளருமான சல்மா, “கர்நாடக இசைப் பாடகர் ரஞ்சனி காயத்திரி என்பவர், டி எம் கிருஷ்ணா பெரியாரைப் புகழ்ந்து பாடுவதை எதிர்த்து பாடகர் T.M கிருஷ்ணா அவர்களின் தலைமையில் நடப்பதால் மியுசிக் அகாடமி விழா 2024 இல் இருந்தும் டிசம்பர் 25 இல் நடக்கும் இசைக் கச்சேரியிலிருந்து விலகிக் கொள்கிறாராம். எத்தனை ஆணவம். இது பெரியார் மண்தான்” என தெரிவித்துள்ளார்.

ரஞ்சனி காயத்ரி - டிஎம் கிருஷ்ணா
"பறை இசைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை" - டி.எம்.கிருஷ்ணா ஆதங்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com