”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா

”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா
”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா

டெல்லியில் நான் கண்டிப்பாக பாட வேண்டும் எனவும் இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது எனவும் கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

தமிழகத்தை சேர்ந்த கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, செங்கல்பட்டு ரெங்கநாதனிடம் இசை பயின்றார். 

பாடகராக இருப்பதோடு பாடல் கற்றுத்தரும் ஆசிரியராகவும் இசை குறித்து எழுதும் எழுத்தாளராகவும் இருக்கிறார். உலகம் முழுதும் பயணித்து இசை நிகழ்ச்சிகளில் பாடியும் சொற்பொழிவுகள் நடத்தியும் வருகிறார். 

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த அவரின் மூன்று மணி நேர கச்சேரிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. சிறந்த இளம் பாடகர், சிறந்த இசைக் கலைஞர், யுவ கலா பாரதி, கல்கி கிருஷ்ணமூர்த்தி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 

கடந்த ஆண்டு மும்பையில் கொலாபா பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடந்த இசைவிழாவில் அல்லாவைப் பற்றி நாகூர் ஹனிபாவின் பாடலை பாடியதற்காக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டவர் டி.எம்.கிருஷ்ணா.

இந்து கடவுள்கள் மட்டுமில்லாமல் மற்ற யேசு, அல்லா கடவுள்கள் பற்றியும் பாடிவருவதால் வலது சாரிகள் டி.எம்.கிருஷ்ணாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் எங்கேயும் இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது எனவும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ’பூங்காவில் நடனம் மற்றும் இசை’ என்ற பெயரில் கலாச்சார நிகழ்வின் அங்கமாக டி.எம்.கிருஷ்ணாவின் இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை ஸ்பிக் மேக்கே மற்றும் இந்திய ஏர்போர்ட் ஆணையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை ஏர்போர்ட் ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில், டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி வரும் நவம்பர் 17 ஆம் தேதி டெல்லி சாணக்யபுரி பகுதியில் உள்ள நேரு பார்க்கில் நடைபெற உள்ளதாக தெரிவித்திருந்தது. இதற்கு இணைய தளங்களில் வலது சாரி அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், திடீரென சில காரணங்களால் நிகழ்ச்சி வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்கப்படும் என ஏர்போர்ட் ஆணையம் தகவல் வெளியிட்டது. வலது சாரிகளின் எதிர்ப்பே இதற்கு காரணம் என பரவலாக பேசப்பட்டது. 

ஆனால் ஏர்போர்ட் ஆணையம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டி.எம்.கிருஷ்ணா, ”டெல்லியில் எங்கேயாவது எனக்கு இடம் கொடுங்கள். நான் கண்டிப்பாக பாட வேண்டும். இவர்களின் அச்சுறுத்தலுக்கு நாம் பயப்படக்கூடாது” என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com