ராமர் கோவில் முறைகேடு புகார் எதிரொலி.. நன்னடத்தைச் சான்றிதழ் கோரும் அறக்கட்டளை! சிக்கலில் ஊழியர்கள்?
செய்தியாளர் - ராஜ்குமார். ர
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ளது ராமர் கோயில்... சமீபத்தில் இந்தக் கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பணத்தை கையாள்வதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில், ராமர் கோயில் நிர்வாகத்தை கவனித்து வரும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஒரு முக்கிய முடிவை மேற்கொள்ளவுள்ளது.
இதன்படி, கோயிலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் விவரங்களும் முழுமையாகச் சரிபார்க்கப்பட உள்ளன. குறிப்பாக, காவல்துறை சரிபார்ப்பு மற்றும் காவல்துறையால் வழங்கப்படும் நன்னடத்தைச் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்.. ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பான விரிவான பின்னணித் தகவல்களையும் அறக்கட்டளை கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கான காரணம் கடந்த ஜூன் மாதம் ராமர் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணம் கையாளப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
இந்த வழக்கில் கடந்த வாரம் சுமார் 70 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கோயில் நிர்வாகத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
காணிக்கைப் பணம் எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கூடுதல் பாதுகாப்புச் சோதனைகள், உடல் சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கோயிலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் பின்னணியையும் முழுமையாகச் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சரிபார்ப்பு நடவடிக்கை, கோயிலின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைச் செயல் அதிகாரியும், ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதியுமான ஜிதேந்திர மிஸ்ரா தலைமையில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தக் காவல்துறை சரிபார்ப்பு மற்றும் நன்னடத்தைச் சான்றிதழை ஊழியர்கள் கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்காத ஊழியர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அறக்கட்டளை தரப்பில் இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.
