SIR நடவடிக்கை.. 2015-ம் ஆண்டுக்கு சென்ற வாக்காளர் எண்ணிக்கை.. வெளியான அறிக்கை!! முழு விபரம் உள்ளே
பிகாரில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, ஜூன் 24ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இப்பணிகளின் முடிவில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களர் அட்டைகளை பெற்றிருந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் என 65 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்களர்கள் அம்மாநிலத்தில் நீக்கப்பட்டனர். இதற்கிடையில், இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, உத்திர பிரதேசம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான எஸ்.ஐ.ஆர். அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 27-அன்று அறிவிப்பை வெளியிட்டு பணிகளைத் தொடங்கியது. SIR-க்கு முன்பாக 50.99 கோடி வாக்களர்கள் இந்த மாநிலங்களில் இருந்த நிலையில், SIR-க்குப் பின் 5.18 கோடி வாக்களர்கள் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நீக்கப்பட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, விடுபட்ட மாநிலங்களுக்குக்கான SIR நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. தற்போது, வரைவுப்பட்டியல் வெளியாகியிருக்கும் நிலையில், 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். இதன்மூலம், SIR காரணமாக இந்தியா முழுவதும் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 13 கோடியைக் கடந்திருக்கிறது. முன்னதாக, SIR நடவடிக்கைக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டது தொடர்பாக எழுந்து வரும் குற்றச்சாட்டுகள் SIR நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, SIR மூலம் நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தச்சூழலில் தான், SIR நடவடிக்கை காரணமாக இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் 2015-ம் ஆண்டுக்குச் சென்றிருப்பதாக, முந்தைய எண்ணிக்கைகளுடன் ஒப்பிட்டு ’பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ செய்தி வெளியிட்டிருக்கிறது. அதன்படி, கடந்த 2015-ஆம் ஆண்டில் இதே பகுதிகளில் சுமார் 81.69 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 2024 மக்களவைத் தேர்தலின்போது இந்த எண்ணிக்கை 92.8 கோடியாக உயர்ந்தது. SIR தொடங்குவதற்கு முன்பு 95.2 கோடியாக இருந்த நிலையில், தற்போது 81.79 கோடியாகக் குறைந்துள்ளது. இதனால், SIRக்குப் பிறகு வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியல், நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையை மீண்டும் 2015-ஆம் ஆண்டின் அளவை நெருங்கச் செய்திருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.

