ராஜஸ்தான்: சில்லறை மூட்டையுடன் ஐபோன் வாங்க சென்ற பிச்சைக்காரர் (!)...!
ஒருவரின் தோற்றத்தைப் பிரதிபலிப்பதில் அவர் அணிந்திருக்கும் உடையும் துணை நிற்கும். பல இடங்களில் ஆடையை வைத்தே ஒருவரை எடை போடுவது உண்டு. அந்தவகையில், 'எக்ஸ்பெரிமெண்ட் கிங்' என்ற இன்ஸ்டாகிராம் சேனல், பிச்சைக்காரர் தோற்றத்தில் ஒருவர் ஐபோன் வாங்க சென்றால், அவரை கடைக்காரர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதைப் பார்க்க ஒரு பரிசோதனையை நடத்தியது. அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் நபர் ஒருவர் பிச்சை எடுக்கும் தோற்றத்தில் காணப்படுகிறார். அழுக்கு நிறைந்த உடலுடன், கிழிந்த ஆடையுடன் காணப்படும் அவர், தன்னுடைய முதுகில் ஒரு மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு செல்போன் கடையாக ஏறி இறங்குகிறார். அவர், ஐபோன் 15ஐ வாங்குவதற்காக காசு நிறைந்த அந்த மூட்டையுடன் ஒவ்வொரு கடைகளுக்குள்ளும் செல்வதை வீடியோவில் காண முடிகிறது.
அவரது தோற்றத்தைப் பார்த்து அந்த செல்போன் கடைக்காரர்கள், அவரைப் புறக்கணிக்கின்றனர். பலரும் உள்ளே விடவே மறுக்கின்றனர். இன்னும் சிலர் அந்த சில்லறை காசுகளை வாங்க முடியாது என திருப்பி அனுப்புகின்றனர். ஆனால், அவர் மனந்தளராது (!) கடைகடையாக ஏறி இறங்குகிறார்.
இறுதியில் ஜோத்பூரில் உள்ள செல்போன் விற்பனையகத்தில் நுழைகிறார். அவரை, கடைக்காரர்கள் வரவேற்று உபசரித்து ’என்ன வேண்டும்’ என கேட்கின்றனர். அவர்களிடம், ’எனக்கு ஐபோன் 15 ரக போன் வேண்டும்’ எனக் கேட்கிறார். மேலும் அவர், அதற்கு உண்டான பணத்தை சில்லறையாகக் கொண்டு வந்திருப்பதாகக் கூறுகிறார். இதை ஏற்ற கடைக்காரர்கள், அவருக்கு போனை காட்டுகின்றனர். பின்னர் அந்த நபர், தரையில் தனது மூட்டையிலிருந்து சில்லறை காசுகளைக் கொட்டுவதைக் காண முடிகிறது. அதை, செல்போன் கடை ஊழியர்கள் எண்ணுகின்றனர். பிறகு அந்த நபர், ஐபோன் மொபைலை எடுத்து ஆராய்ந்து, அதனுடன் போஸ் கொடுக்கிறார். அத்துடன் அந்தக் கடை உரிமையாளருடனும் படம் எடுத்துக் கொள்கிறார்.
யார் எப்படி வந்தாலும் கடையில் மதிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவும், மனிதரின் வெளித்தோற்றத்தை பார்த்து யாரையும் எடை போட்டுவிடக் கூடாது என்பதற்காகவுமே இப்படியொரு வீடியோ படம் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.