கைகோர்த்த சேனா சகோதரர்கள்... மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்புமுனையா?
மகாராஷ்டிராவில் மிகப்பெரும்கட்சியாக திகழ்ந்த சிவசேனா 2005ஆம் ஆண்டு உடைந்தது. தனது அரசியல் வாரிசு மகன் உத்தவ் தாக்கரே என அறிவித்தார் கட்சியின் நிறுவனர் பால்தாக்கரே. இதனால் கோபித்துக்கொண்டு தனிக்கட்சி தொடங்கினார் பால்தாக்கரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரே.மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா என்ற இவரது கட்சி குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெறாவிட்டாலும் அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் மிக்கதாகவே விளங்கியது. 2022ஆம்ஆண்டு சிவசேனை மீண்டும் இருபிரிவுகளாக உடைந்து ஒரு பிரிவு உத்தவ் தலைமையிலும் மற்றொரு பிரிவு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலும் இயங்கி வருகின்றன.
உத்தவிடம் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே பிரிவு வலுவானதாக மாறி ஆளுங்கூட்டணியில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் உத்தவ் சிவசேனா பலவீனமடைந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில் மராத்தி மொழிபிரச்சினை அதற்கு புத்துயிர் கொடுத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பிரிந்த சகோதரர்கள் உத்தவும் ராஜும் தற்போது கைகோர்த்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே கட்சியாக இணைவார்களா அல்லது தேர்தல்கூட்டணி வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தி திணிப்புக்கு எதிரான தீ மகாராஷ்டிர அரசியல் அனலை தகிக்கவைத்துள்ளது. அங்கு மதம் சார்ந்த அரசியல்களம் மொழி சார்ந்ததாக மாறுமா என்ற நிலை உருவாகியுள்ளது. விரைவில் நடைபெறஉள்ள உள்ளாட்சி தேர்தல் அரசியல் மாற்றங்களுக்கான தொடக்கப்புள்ளியாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில்தான், இந்தி மொழி பேசும் மாநிலங்களைவிட, அதனை பேசாத மாநிலங்களே அதிக வளர்ச்சி அடைந்துள்ளதாக மஹாராஷ்டிரா நவநிர்மண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய ராஜ் தாக்கரே, தன்னையும், தனது சகோதரர் ராஜ் தாக்கரேவையும், , முதல்வர் ஃபட்னாவிஸ் ஒருங்கிணைத்ததன் மூலம் தனது தந்தை செய்ய முடியாததை செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தி வெறும் 200 ஆண்டு கால வரலாறுகொண்ட மொழி என கூறிய அவர், இந்தி திணிப்பை ஒருபோதும் மராத்தியர்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். இந்தியாவில் இந்தி மொழி பேசும் மாநிலங்களைவிட, அதனை பேசாத மாநிலங்களே அதிக வளர்ச்சிஅடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ராஜ்தாக்கரே, அப்படி என்றால் 3ஆவதுமொழிக்கு என்ன தேவை இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய உத்தவ் தாக்கரே, நாங்கள் இருவரும் இனி ஒன்றாக இருக்கவே தற்போது சேர்ந்துள்ளதாகவும், இதுவெறும் ஆரம்பம்தான் என கூறினார். இந்து, இந்துஸ்தானை ஏற்போம், ஆனால் இந்தியை ஒரு போதும் ஏற்கமாட்டோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியாவில் பல மன்னர்கள் ஆட்சி செய்த போதும், அவர்கள் தங்களது மொழிகளை மக்களிடம் திணிக்கவில்லை மாறாக இந்தியை பாஜக அரசு மாநிலங்கள் மீது திணிப்பது ஏன் எனவும் வினவினார்.