”மக்களவை தேர்தலில் மோசடி.. மோடி பிரதமராகியிருக்கவே முடியாது..” - ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு!
காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய ராகுல் காந்தி, தாங்கள் நடத்திய ஆய்வில் ஒரு மக்களவை தொகுதியில் இருந்த ஆறரை லட்சம் வாக்காளர்களில் ஒன்றரை லட்சம் பேர் போலிகள் என்றும் இதற்கான ஆதாரம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
மோடி பிரதமராகியிருக்கவே முடியாது..
தேர்தல் ஆணையம் மூலம் பாஜக இம்முறைகேட்டை செய்ததாகவும் இதை செய்திருக்காவிட்டால் அக்கட்சிக்கு 15 முதல் 20 தொகுதிகள் குறைவாக கிடைத்து மோடி பிரதமராக முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். தேர்தல் ஆணையம் சுயேச்சையாக செயல்படவில்லை என்றும் எனவே அதை இறந்துபோன அமைப்பாகத்தான் பார்க்கவேண்டும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி முறைகேடு நடைபெறுகிறது என்ற சந்தேகம் 11 ஆண்டுகளாகவே இருப்பதாகவும் காங்கிரஸ் மோசமாக தோற்ற தேர்தல் முடிவுகள் தனக்கு வியப்பாக இருந்ததாகவும் ராகுல் காந்தி பேசினார்.
ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசத்தில் ஒரு தொகுதியில் கூட தாங்கள் வெல்லாததில் சந்தேகம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோற்ற நிலையில் ஒரு கோடி கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது பின்னர் தெரியவந்ததாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.