மணிப்பூர் | குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.. மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர்.
இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, இன்றளவும் முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையே, மணிப்பூரில் நடந்த கலவரங்களுக்கு மாநில முதல்வரே காரணம் எனக் கூறி, சில ஆடியோக்கள் வெளியாகின. குக்கி இன மாணவர் அமைப்பு, இந்த ஆடியோ ஆதாரங்களை இரண்டு கட்டங்களாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இதற்கு மணிப்பூர் அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. ஆயினும் இதற்காக முதலமைச்சர் பதவியிலிருந்து பிரேன் சிங் விலக வேண்டுமென்று கடுமையான வலியுறுத்தல்களும் அளிக்கப்பட்டு வந்தன. ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் கட்சியும் கூறியிருந்தது.
இதனிடையே, கடந்த வாரம் (பிப்.9), ஆளுநரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை பிரேன் சிங் அளித்தார். அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் அஜய் குமார் பல்லா, மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதலமைச்சர் பதவியில் தொடருமாறு பிரேன் சிங்கை கேட்டுக்கொண்டார். இதற்கிடையே பாஜக தலைவர்கள் ஒன்றுகூடி, அடுத்த முதல்வர் குறித்து விவாதித்தனர். இதில் ஒரு முடிவும் எட்டப்படவில்லை. என்றாலும் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கப்படவிருந்த நிலையில், மணிப்பூரில் முழு நேர முதல்வர் இல்லாததால் ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்ற காலக்கெடு நேற்றுடன்(பிப்.12) முடிவடைந்தது.
அவ்வாறு சட்டப்பேரவை கூடினால் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த அசாதாரண சூழ்நிலையைத் தவிர்க்க குறிப்பிட்ட காலத்திற்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அதன்படி, இன்றிலிருந்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.