மணிப்பூர் | முதல்வர் பிரேன் சிங் திடீர் ராஜினாமா.. முற்றும் நெருக்கடி.. பின்னணி இதுதான்!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின.
சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, இன்றளவும் முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையே, மணிப்பூரில் நடந்த கலவரங்களுக்கு மாநில முதல்வரே காரணம் எனக் கூறி, சில ஆடியோக்கள் வெளியாகின. குக்கி இன மாணவர் அமைப்பு, இந்த ஆடியோ ஆதாரங்களை இரண்டு கட்டங்களாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இதற்கு மணிப்பூர் அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. ஆயினும் இதற்காக முதலமைச்சர் பதவியிலிருந்து பிரேன் சிங் விலக வேண்டுமென்று கடுமையான வலியுறுத்தல்களும் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஆளுநரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை பிரேன் சிங் அளித்துள்ளார். ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் கட்சி கூறியிருந்த நிலையில் இம்முடிவை பிரேன் சிங் எடுத்துள்ளார்.
60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் 32 உறுப்பினர்களுடன் ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவுக்கு இரு கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. காங்கிரசுக்கு 5 உறுப்பினர்களும் என்பிபி கட்சிக்கு 7 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்கள் தவிர 3 சுயேச்சை உறுப்பினர்களும் குக்கி மக்கள் கூட்டணிக்கு 2 உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்த சூழலில் பாஜகவை சேர்ந்த குக்கி சமூக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்னதாக, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியும் மணிப்பூர் அரசுக்கு அளித்திருந்த ஆதரவை வாபஸ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரேன்சிங்-ன் முடிவுக்குப் பின்னால் பாஜக எம்.எல்.ஏக்கள் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் காரணமாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே பிரேன் சிங்கின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் அஜய் குமார் பல்லா, மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதலமைச்சர் பதவியில் தொடருமாறு பிரேன் சிங்கை கேட்டுக்கொண்டுள்ளார்.
மணிப்பூரில் விரைவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன. இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. பாஜக புதிய முதல்வரை நியமிக்குமா என்பதும் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கிடையில், பாஜகவின் உயர்மட்டத் தலைவர் சம்பித் பத்ரா மணிப்பூரில் முகாமிட்டுள்ளார்.