மணிப்பூர் | குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது.
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அம்மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை. இதற்கிடையே, மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்து பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவர் பதவி விலகினார். பைரன் சிங் பதவி விலகியதைத் தொடர்ந்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்பட இருக்கிறது.
மணிப்பூரில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக, குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். அங்கு மேலும் ஆறு மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களால், வன்முறைகள் அரங்கேறின. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததால், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தற்போதைய சூழலில், அமைதியை நிலைநாட்டவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் இந்த நீட்டிப்பு அவசியம் என மத்திய அரசு கருதுகிறது.