மணிப்பூர் | மீண்டும் வெடித்த வன்முறை.. இணையச் சேவை நிறுத்திவைப்பு!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது.
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அம்மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை. இதற்கிடையே, மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்து பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவர் பதவி விலகினார். பைரன் சிங் பதவி விலகியதைத் தொடர்ந்து தற்போது மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
இந்த நிலையில், மணிப்பூர் கலவரத்தில் மெய்தி சமூகத்தின் தன்னார்வக் குழுவான அரம்பாய் தெங்கோலின் (AT) முக்கியத் தலைவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் போராட்டம் வெடித்தது. நேற்று இரவு தலைநகர் இம்பாலில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. போராட்டக்காரர்கள் சாலையில் டயர்களை எரித்து சாலைகளை மறித்தனர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் இம்பாலில் வசிப்பவர்கள் சிலர் தெரிவித்தனர். போராட்டத்தின்போது, கருப்பு டி-சர்ட் அணிந்த இளைஞர்கள் குழு ஒன்று பெட்ரோல் பாட்டில்களை ஏந்தியபடி,"நாங்கள் ஆயுதங்களை கைவிட்டுவிட்டோம். இப்போது நீங்கள் எங்களைக் கைது செய்கிறீர்கள். நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்" என மிரட்டல் விடுத்தனர்.
மேலும், தங்கள் தலைவரை விடுவிக்கக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, நிலைமையைக் கட்டுப்படுத்த, இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இணைய சேவைகளை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.