பீகார் வாக்காளர் அதிகரிப்பு.. 3 லட்சம் பேர் சேர்க்கப்பட்டது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்!
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை 7.42 கோடியில் இருந்து 7.45 கோடியாக அதிகரித்தது குறித்து காங்கிரஸ் கட்சி எழுப்பியிருந்த சமூக ஊடகப் பதிவுக்குத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று விளக்கம் அளித்துள்ளனர்.
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை 7.42 கோடியில் இருந்து 7.45 கோடியாக அதிகரித்தது குறித்து காங்கிரஸ் கட்சி எழுப்பியிருந்த சமூக ஊடகப் பதிவுக்குத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று விளக்கம் அளித்துள்ளனர். சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னரும் மூன்று லட்சம் (3 லட்சம்) வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை அறிவித்த தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில், வாக்காளர்களின் எண்ணிக்கை 7.42 கோடியாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்த வெளியீடுகளில் இந்த எண்ணிக்கை 7.45 கோடியாக உயர்ந்தது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
அக்டோபர் 6ஆம் தேதி வெளியிடப்பட்ட 7.42 கோடி வாக்காளர் எண்ணிக்கை, சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
தேர்தல் விதிகளின்படி, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும், ஒவ்வொருகட்டத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு 10 நாட்களுக்கு முன் வரை தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
"எனவே, அக்டோபர் 1ஆம் தேதி முதல், இரண்டு கட்டங்களுக்கான வேட்பு மனு தாக்கல் கடைசி தேதிக்கு 10 நாட்களுக்கு முன் வரை பெறப்பட்ட அனைத்துச் செல்லுபடியாகும் விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்த பின்னர், தகுதியுள்ள வாக்காளர் யாரும் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, அவர்களின் பெயர்கள் விதிகளின்படி பட்டியலில் சேர்க்கப்பட்டன" என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி அக்டோபர் 17 ஆகவும், இரண்டாம் கட்டத்திற்கான கடைசி தேதி அக்டோபர் 20 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. வாக்களித்த பிறகு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இந்தத் திருத்தப்பட்ட எண்ணிக்கை தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டது என்றும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

