”நாங்கள் ஆடுகள் அல்ல..” - பவன் கல்யாண் கட்சியைச் சாடிய பிரகாஷ் ராஜ்.. நடந்தது என்ன?
கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், பல மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதேநேரத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் அவ்வப்போது குரல் கொடுத்துவருகிறார். மேலும், இன்னும் சில நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் தனது கருத்தை வலுவாக வைக்கக்கூடியவராக வலம் வருகிறார். இந்த நிலையில், ‘கேள்வி கேட்காமல் அடிமை வாழ்க்கை வாழ்வதற்கு நாங்கள் ஆடுகள் அல்ல; என்று நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் பொதுச் செயலருமான நாகபாபு கொனிடேலா, ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாணை ஆதரித்து பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், ‘ஒரு தலைவரின் வார்த்தையே இறுதியானது. அவரது பாதையில் சாத்தான்களையும் அரக்கர்களையும் யாரும் கண்டதில்லை, எது சரி எது தவறு என்பது அவருக்கு மட்டுமே தெரியும். உங்கள் சந்தேகங்களை மூடுங்கள், உங்கள் நாவை அடக்குங்கள், கேள்வியின்றி தலைவரைப் பின்பற்றுங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள பிரகாஷ் ராஜ், ‘நாங்கள் ஆடுகள் அல்ல... பிழைப்பதற்காக அடிமைகளாக இருப்பவர்கள் அல்ல. இதுபோன்ற மிரட்டல்களை விடுக்காதீர்கள். கேள்வி கேட்பது எங்கள் உரிமை. எந்தவொரு தலைவருக்கும்... என்னை ஒரு தலைவர் என்று நினைப்பவருக்கும், பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது. புரிகிறதா’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு இடையே வலுவான பிராந்திய ஒற்றுமைக்கு பிரகாஷ் ராஜ் அழைப்பு விடுத்திருந்தார். அப்போது பவன் கல்யாண் பெயரைக் குறிப்பிடாமல் பதிவிட்ட பிரகாஷ் ராஜ், ‘நீங்கள் வருவதாகச் சொன்னால், நாங்கள் வேண்டாம் என்று சொல்வோமா? வாருங்கள் சார்... ஆனால் வருவதற்கு முன் நீங்கள் தனியாக வருகிறீர்களா? கூட்டணியுடன் வருகிறீர்களா அல்லது தனியாக வருகிறீர்களா? வருவதற்கு முன் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். சும்மாகேட்கிறேன்’ எனக் கிண்டலாகப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுக்குப் பிறகுதான் அவர்கள் இருவருக்குக்குள்ளும் கருத்து மோதல் முற்றியுள்ளது.

