Khushbu Slams Prakash Raj Over Election Deposit Loss
பிரகாஷ் ராஜ், குஷ்பு, சத்யராஜ்Pt web

”பிரகாஷ் ராஜ், சத்யராஜ் இருவரும் கூத்தாடிகள் தானே” - குஷ்பு கேள்வி!

எங்களை விமர்சிக்கும் பிரகாஷ் ராஜ் தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் கூட பெற முடியாதவர் என பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
Published on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை நாளை மறுநாளுடன் நிறைவடையவிருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக ஆகிய கட்சிகளுடன் முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் களத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தான், அனைத்துக் கட்சிகளும் தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், திமுக கூட்டணிக்கு ஆதரவளித்து பரப்புரையில் ஈடுபட்டு வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், நேற்று மதுரை மத்தி தொகுதியில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டார்.

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்Pt web

அப்போது, அத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிடவுள்ள சுந்தர் சி-யை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். குறிப்பாக, ”சுந்தர் சி வேட்பாளராக ஆவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வரை சினிமா சூட்டிங்கில் இருந்தார். புதிய நீதிக்கட்சியின் கொள்கை என்ன?. வெற்றிகரமான இயக்குனர் ஆவதற்கு எவ்வளவு முயற்சிகள் செய்திருப்பார். ஆனால், எம்.எல்.ஏ பதவி மட்டும் எளிதாக கிடைத்து விடுமா?. உங்கள் மனைவி 10 வருடங்களில் 3 கட்சி மாறியிருக்கிறார். அவருக்கு கிடைக்காத சீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது என யோசித்தீர்களா?” என விமர்சித்திருந்தார். தொடர்ந்து, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும், குஷ்பு மற்றும் சுந்தர் சி-யை சங்கி எனவும் சினிமான கூத்தாடிகள் எனவும் கடுமையாக விமர்சித்திருந்தது பேசுபொருளாகியிருந்தது.

இந்தநிலையில் தான், இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரகாஷ் ராஜ் என் நண்பர் தான். அவர் பிடிஆர் உடன் என்னை ஒப்பிட்டு பேசியுள்ளார். திமுகவில் இருக்கும் செந்தில் பாலாஜி, சேகர் பாபு திமுகவிலேயே பிறந்து வளர்ந்தவர்களா?. கர்நாடகாவில் பிரகாஷ் ராஜ் தேர்தலில் போட்டியிட்டு நின்று டெபாசிட் கூட வாங்காமல் தோற்றுப் போனார். எங்களை கூத்தாடி என்று சொல்லும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் பப்ளிசிட்டிக்கு ஒரு கூத்தாடி தானே தேவைப்படுகிறார். நாங்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி பல பேரை படிக்க வைத்துள்ளோம். சுந்தர் சி பப்ளிசிட்டி செய்பவர் கிடையாது” என பதிலளித்துள்ளார்.

Khushbu Slams Prakash Raj Over Election Deposit Loss
“திமுக கூட்டணியிலிருந்தாலும் அதிமுகவிற்கு உதவுகிறார்..” பிரேமலதா குறித்து சுந்தர்.சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com