’நடிகனுக்காக விசில் அடிக்கலாம்.. நாட்டை கொடுக்கமுடியாது’ - விஜயை விமர்சித்த பிரகாஷ் ராஜ்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பழனி சிபிஎம் வேட்பாளர் பாண்டியை ஆதரித்து பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார். நடிகனுக்காக விசில் அடிக்கலாம், ஆனால் நாட்டை கொடுக்க முடியாது என்று அவர் கூறினார். சினிமா மாடல், திராவிட மாடல், அடிமை மாடல் என மூன்று அணிகள் மோதும் தேர்தல் இது என்றும், மக்கள் சரியான நபரை தேர்வு செய்ய வேண்டும் என்றார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஒருபக்கம் ஆட்சியை தக்கவைக்கும் மெகா கூட்டணியை அமைத்திருக்கும் திமுக, மறுபக்கம் லெகஸியை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் அதிமுக கூட்டணி, தவெக, நாதக, சசிகலா-ராமதாஸ் என 5 முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களும் அனல்பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருவதோடு, மற்ற கட்சியை குறித்து பகிரங்கமாக விமர்சித்தும் வருகின்றனர்.
இந்தசூழலில் தான் பழனி சிபிஎம் வேட்பாளர் பாண்டியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் தவெக தலைவர் விஜயை விமர்சித்து பேசினார்.
தமிழ்நாட்டு மக்களுக்காக நின்னு இருக்கியா..
2026 சட்டமன்ற தேர்தல் திராவிட மாடல், அடிமை மாடல், சினிமா மாடல் என 3 அணிகளுக்கு இடையேயான மோதல் என்று கூறிய பிரகாஷ்ரான், நடிகனுக்காக விசில் அடிக்கலாம், நாட்டை கொடுக்கமுடியாது என்று விமர்சனம் செய்தார்.
விஜயை விமர்சித்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “சினிமா மாடல்னு ஒன்னு இருக்கு, ஒரே சினிமாவில் காசு சம்பாதித்துவிடலாம், ஸ்டார் ஆகிவிடலாம். சினிமாவிற்குள் டாக்டர் ஆகலாம். இன்ஜினியர் ஆகலாம். ஏன் முதல்வர்கூட ஆகலாம். அரசியலில் அப்படியே முதல்வர் ஆகிடுவியா நீ? என் அளவிற்கு அரசியல் பேசி இருக்கியா பா நீ, இத்தனை வருடங்களில் தமிழக மக்களுக்கோ, மொழிக்கோ, தன்மானத்திற்கோ பிரச்னை வந்தபோது அவர்களுக்காக நின்னு இருக்கியா.
உங்கள் மீது மக்கள் வைத்திருக்கிற அன்பு, உங்கள் திறமைக்கானது தான், அரசியலுக்கானது அல்ல. அதை நீங்கள் அரசியலுக்காக பயன்படுத்திறீங்க, நடிகனுக்காக விசில் அடிக்கலாம், ஆனால் நாட்டை கொடுக்கமுடியாது. அரசியல் வேற, சினிமா வேற, அந்த அன்பு வேற, இந்த அன்பு வேற.
திராவிட மாடல் வேணுமா? அடிமை மாடல் வேணுமா? சினிமா மாடல் வேணுமா? என்னை பொறுத்தவரைக்கும் அரசியலை மக்கள் நம்ம பண்ணனும், ஜெயிச்சவங்க வேலை பார்க்கணும். நம்ம அரசியல் சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும், எந்த அணி நமக்காகவும், தமிழுக்காகவும் நிற்கும் என்பதை புரிந்து அதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கடைசியா ஒன்னு சொல்றன் இது திமுக அணிக்கும், அதிமுக அணிக்கும் நடக்குற தேர்தலா என்றால் இல்லை. விஜய் சொல்ற மாதிரி திமுகவிற்கும், தவெகவிற்கும் நடக்குற தேர்தலா அதுவும் இல்லை. இது ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் நடக்குற தேர்தல்” என்று பேசினார்.

