நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா!

பாலியல் வழக்கில் வெளிநாடு சென்று தலைமறைவாக இருந்த மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவை பெங்களூர் விமான நிலையத்தில் சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்தனர்.
பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணாமுகநூல்

செய்தியாளர்: பழனிவேல்

பாலியல் வழக்கில் சிக்கிய கர்நாடக எம்.பி

சில வாரங்களுக்கு முன்னர் கர்நாடக மாநில மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் ஆசான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா, ஏராளமான பெண்களை ஏமாற்றி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் சமூக வலைதளங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பதிவுகள் வெளியாகின. இந்த சம்பவம் கர்நாடகா மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது.

பல அமைப்புகள் பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவர்களின் வீட்டில் பணியாற்றும் பணிப்பெண்கள் புகார் அளித்தனர்.

மேலும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் மக்கள் பிரதிநிதி பெண் ஒருவரும், பிரஜ்வல் ரேவண்ணா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதி முன்பு புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் ரேவண்ணா மற்றும் அவரது மனைவி, மகன் பிரஜ்வல் ரேவண்ணா, மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பிரஜ்வல் ரேவண்ணா
ரேவண்ணா கைது.. தேடப்படும் பிரஜ்வல்.. பாஜகவை சாடும் காங்கிரஸ்.. என்னதான் நடக்கிறது கர்நாடகத்தில்?

லுக் அவுட் நோட்டீஸ்

இந்நிலையில் பிரஜ்வல் நாட்டை விட்டு தப்பி சென்றார். அவரை பிடிக்க கர்நாடக மாநில சிறப்பு விசாரணை குழு போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பாஸ்போர்ட் முடக்க நடவடிக்கையும், இன்டர்போல் போலீசாருடன் அவரை வெளிநாட்டில் கைது செய்ய தேவையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

பிரஜ்வல் ரேவண்ணா
’உடனே நாடு திரும்பு’ - பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் விவகாரம்| பேரனுக்கு எச்சரிக்கை விடுத்த தேவகவுடா!

ஆனால் அந்த முயற்சிகளை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 34 நாட்களாக பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, “நான் இந்தியா திரும்புகிறேன். சிறப்பு விசாரணைக் குழு முன்பு விசாரணைக்கு ஆஜராகவுள்ளேன்” என தெரிவித்தார். 

பிரஜ்வல் ரேவண்ணா
பாலியல் புகார் | ”பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” - வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா!

கைது செய்யப்பட்டார்.

ஏற்கெனவே அவருக்கு கைது வாரண்ட் பெற்றுள்ள போலீசார், இந்தியா வந்த அவரை விமான நிலையத்தில் கைது செய்ய முயற்சிகள் மேற்கொண்டனர். அதன்படி இன்று (மே.31) ஜெர்மன் நாட்டில் இருந்து விமானம் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூர் விமான நிலையத்திற்கு நள்ளிரவு 12.45 மணிக்கு வருகை தந்த பிரஜ்வல் ரேவண்ணாவை விமான நிலைய தொழில் பாதுகாப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் வழக்கை விசாரிக்கும் கர்நாடக சிறப்பு விசாரணை குழு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதை அடுத்து போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்து ரகசிய வழியில் அழைத்துச் சென்றனர். விசாரணை முடிந்த பிறகு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளில் போலீசார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

பிரஜ்வல் ரேவண்ணா
நேரில் ஆஜராகும் பிரஜ்வல் ரேவண்ணா; மன உளைச்சல் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டதாக விளக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com