ரேவண்ணா கைது.. தேடப்படும் பிரஜ்வல்.. பாஜகவை சாடும் காங்கிரஸ்.. என்னதான் நடக்கிறது கர்நாடகத்தில்?

கர்நாடகாவில் பெண் கடத்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஹெச்.டி. ரேவண்ணா கைது செய்யப்பட்டார். கடத்தப்பட்ட பெண்ணும் மீட்கப்பட்டுள்ளார்.
ரேவண்ணா
ரேவண்ணாpt web

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனான ஹெச்.டி.ரேவண்ணா, இளைய மகனான ஹெச்.டி.குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தவர். இந்நிலையில், ரேவண்ணாவின் வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதில், 2019 முதல் 2022 வரையிலான மூன்று ஆண்டுகளில் தனக்கு பலமுறை ஹெ.டி.ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என அந்த பெண் கூறியிருந்தார். இதன்பேரில் 354ஏ, 354டி, 506 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் மைசூர் கே.ஆர்.நகர் காவல்நிலையத்தில் ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வழக்கு தொடர்பாக ஹெச்.டி.ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட தனது தாயை காவல்துறை விசாரணைக்கு அனுப்பாமல் கடத்தியதாக மகன் அளித்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்பேரில் கடத்தலில் ஈடுபட்டதாக, ரேவண்ணாவின் ஆதரவாளர் சதீஷ் பாபண்ணாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரேவண்ணா
“நடந்தாய் வாழி காவேரி” காவிரி ஆற்றுக்கு வந்த சோதனை... திருச்சியின் பரிதாப நிலை

கடத்தப்பட்ட பெண், மைசூர் மாவட்டம் காலேநஹல்லி பகுதியில் ரேவண்ணாவின் உதவியாளர் ராஜகோபால் என்பவரின் பண்ணை வீட்டில் இருக்கும் தகவல் அறிந்து அங்கு சென்ற சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் போலீசார், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டனர். அப்போது ராஜகோபால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இந்நிலையில் காவல்துறையினர் மற்றும் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், புகார் அளித்த இரு பெண்களை ஹசன் மாவட்டம் ஹோலெனரசிபுரத்தில் உள்ள ஹெச்.டி. ரேவண்ணா வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சமையல் அறை, படுக்கை அறை, ஸ்டோர் ரூம் என பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி காட்சிகளை பதிவு செய்தனர். 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. அங்கிருந்த கணினி, மடிக்கணினியை கைப்பற்றினர்.

ரேவண்ணா
Covishield தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சொல்வதென்ன?

ஹெச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை பெங்களூரு எம். பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்த நிலையில், பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தேவகவுடா வீட்டில் இருந்த ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வுக்குழு காவல்துறையினர் கைது செய்தனர். அங்கிருந்து தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, ஹெச்.டி.ரேவண்ணாவின் மகனும் ஹசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு கர்நாடக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது.

சுமார் 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவையும் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, “பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்காணவர்களுக்கு முதலமைச்சர் சித்தராமையா நிதியுதவி அறிவித்துள்ளார். தேவகவுடா குடும்பத்தினரான ரேவண்ணா மற்றும் பிரஜ்வல்லை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பாதுகாக்கின்றனர்.

பிரஜ்வல்லைப் பற்றி தகவல் தெரிந்திருந்தும் பாஜக ஏன் ஜேடி (எஸ்) உடன் கூட்டணி வைத்தது? இத்தனை வீடியோக்கள் வெளிவந்தபின்பும் பிரஜ்வல் தூதரக பாஸ்போர்ட்டில் ஜெர்மனிக்கு தப்பிச் செல்வதை வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏன் தடுக்கவில்லை? அவரது தூதரக பாஸ்போர்ட்டை பிரதமர் மோடி ஏன் ரத்து செய்யவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com