NOTE THIS POINT : ஒற்றைத் தன்மையா? கூட்டாட்சித் தத்துவமா? வெல்லப்போவது எது?
2026 ஏப்ரல் 24 முதல் தற்போது வரை, அதாவது ஏறத்தாழ 2 மாதங்களுக்குள் 34 எம்பிக்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியது மற்றும் தங்களது கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதன் காரணமாக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியிருக்கின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, மம்தா தலைமையிலான திரிணமூல் என பல கட்சிகளில் இருந்து எம்பிக்களின் விலகல்களும், கட்சித் தலைமையின் மீது அதிருப்தி கொண்டு பலர் தனித்து செயல்படத் தொடங்கியிருப்பதும் அதிகரித்திருக்கிறது. சொல்லிவைத்தார்போல் அத்தனை பேரும் பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு ஆதரவளித்தது மற்றும் பாஜகவில் இணைய முன்வந்திருப்பது கவனிக்கத்தக்கது.
அத்தனைப் புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தால் பாஜகவை நோக்கியும், அதன் அடுத்தடுத்த திட்டங்களையும் நோக்கியுமே கோடுகள் நீள்கின்றன. அடுத்து, திமுகவும் குறிவைக்கப்படும் என்றும் அதிர்ச்சிகளைக் கிளப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.. என்ன நடக்கிறது? இது NOTE THIS POINT.
காங்கிரஸும் சுதந்திர இந்தியாவும்
சுதந்திர இந்தியாவில் 1967 வரை காங்கிரஸ் கட்சியே நாடு முழுவதும் கோலோச்சிக் கொண்டிருந்தது. மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டமன்றங்கள் என அதிகாரத்திற்கான அனைத்து இடங்களிலுமே காங்கிரஸ் வெல்ல முடியாத சக்தியாக இருந்தது. ஆனால், காங்கிரஸ் செயல்பாடுகளில் அதிருப்தி கொண்டு பல மாநிலங்களில் காங்கிரஸில் இருந்து விலகியும், தனித்தும் பிராந்திய கட்சிகள் தோன்ற ஆரம்பித்தன. குறிப்பாக, தென் மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகள் மாநிலத்தின் உரிமைகளையும், மாநிலத்தின் தேவைகளையும் மக்களின் மொழியில் பேசியதால் மக்களிடையே மாநில கட்சிகளுக்கு செல்வாக்கு பெருகியது.
மாநில கட்சிகளின் வளர்ச்சி
இது எப்படி சாத்தியமானது என்பதை FRONTLINE இணையத்தில் Is it the end of the road for regional parties in India? எனும் தலைப்பில் பிராந்திய கட்சிகளின் தோற்றமும் ஆதரவும் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து Rajendra Sharma, Rajesh OP Singh என இரு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். அதாவது, ''1967க்குப் பின் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்கள் நிகழ்ந்தன. சம காலத்தில் இந்தியா இரு போர்களின் விளைவுகளையும், பருவமழை பொய்த்ததால் வாழ்வாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டது. அதோடு இரு பிரதமர்களின் அடுத்தடுத்த மரணங்கள் ஒட்டுமொத்தமாக அரசியல் ஸ்திரத்தன்மையையும் பொருளாதார நெருக்கடிகளையும் உருவாக்கின'' என்கின்றனர் ஆய்வாளர்கள்..
மாநிலங்களின் வளர்ச்சி, நிறுவனர்களாக இருந்த கட்சித் தலைவர்களின் மரணங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியா முழுவதும் கோலோச்சிய பிராந்திய கட்சிகளின் சகாப்தம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வருவதாகவும் பார்க்கப்படுகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல மாநிலங்களில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் இதுவரை இந்திய அரசியல் வரலாறு சந்தித்திராத ஒன்று. 15 ஆண்டுகள் ஆண்ட கட்சி ஒரேயொரு தேர்தல் தோல்விக்குப் பிறகு தலைகீழாக மாற்றமடைகிறது; அதன் தலைவர் இதுவரை தான் எதிர்த்த கட்சியிலேயே சேர இருப்பதாக தகவல்கள் வருகிறதென்றால் நடந்தவை ஏதும் எதேச்சையானதல்ல என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
எதிர்க்கட்சி எம்பிக்களின் விலகல், 2026ல் தொகுதி மறுசீரமைப்பு மசோதா 54 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது என இரண்டையும் இணைத்துப் பார்க்கலாம். ஏனெனில், இரு மாதங்களுக்கு முன் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்மொழிந்த மகளிர் இடஒதுக்கீட்டுடன் இணைந்த தொகுதி மறுவரையறை மசோதா ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி, பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மக்களவையில் ஒரு அரசியலமைப்பு திருத்த மசோதா நிறைவேறாமல் போன முதல் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற நிலவரம் என்ன?
வரும் பருவகால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை மீண்டும் கொண்டு வருவதற்கும் அதை நிறைவேற்றுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை NDA மேற்கொள்ளும்; அப்போது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இரு அவைகளிலும் அவசியம். அதற்கான சம்பவங்கள்தான் எம்பிக்களின் விலகல் என்று அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், 3 இடங்கள் காலியாக இருக்கும் சூழலில் 540 எம்பிக்கள் இருக்கின்றனர். இதில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற வேண்டுமென்றால் மூன்றில் இருமடங்கு ஆதரவு அவசியம். அதாவது 360 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 உறுப்பினர்கள் இருக்கின்றனர். திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்களையும் சேர்த்தால் அது 313. தற்போது, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்பிக்கள் 6 பேர் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு மாறியிருப்பதன் மூலம் NDAவிற்கான பலம் 319 ஆக அதிகரித்திருக்கிறது. இனி மக்களவையில் மூன்றில் இரு பங்கு எம்பிக்களைப் பெற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 41 எம்பிக்கள் மட்டுமே தேவை.
அதேபோல் மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 148 எம்பிக்கள் உள்ளனர். சமீபத்தில் 3 திரிணமூல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பிக்கள் ராஜினாமா செய்தது, உத்தரபிரதேசத்தில் 10 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய இருப்பது போன்ற விஷயங்கள் மாநிலங்களவையில் பெரும்பான்மையை நோக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணி நகருவதற்கான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல்
பெரும்பான்மை நோக்கி நகர்ந்து தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேறிவிட்டால் அடுத்தது ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான திட்டமும் முன்வைக்கப்படலாம். அந்த திட்டமும் வெற்றி பெறும் பட்சத்தில் பிராந்திய கட்சிகளுக்கு முடிவுரை எழுதப்படும் என்ற அச்சமும் தென்னிந்திய கட்சிகளிடையே இருக்கிறது. இதை FRONTLINE இணையத்தில் SABA NAQVI எழுதிய DADAGIRI DEMOCRACY கட்டுரையின் வழியே மேலும் புரிந்துகொள்ள முடியும். இராணுவப் புரட்சி, தேர்தல்கள் அல்லது மக்களின் புரட்சிகள் மூலமாக அல்லாமல், பிராந்தியக் கட்சிகளை ஒவ்வொன்றாக பணம் கொடுத்து உடைத்து நாம் ஒற்றை ஆட்சி முறைக்கு வழிவகுத்துவிடுவோமா? என கேள்வி எழுப்பும் அவர் இது சாத்தியமற்றது என நான் நம்ப விரும்பினாலும், இது நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என சொல்லிவிடவும் முடியாது என தெரிவிக்கிறார். திமுகவும் இதில் குறிவைக்கப்படும் என சுட்டிக்காட்டுகிறார் SABA NAQVI .
பிராந்திய கட்சிகளை பாஜக குறிவைக்கிறது என்றால், அதற்கு பிராந்திய கட்சிகளே முதன்மையான காரணம் என்பதையும் Rajendra Sharma மற்றும் Rajesh OP Singh குறிப்பிடுகின்றனர். பல பிராந்திய கட்சிகள் காங்கிரஸை எதிர்த்துதான் உருவாக்கப்பட்டன. காங்கிரஸ் பெரும்பான்மை பெற தவறிய மாநிலங்களில் எல்லாம் பிரிந்து சென்றவர்கள் வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அரசாங்கங்களை அமைத்தனர். இத்தகைய காலக்கட்டத்தில், அதாவது, 1989 முதல் 2014 வரை மத்திய அரசாங்கத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் பிராந்திய கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவை எனும் நிலை ஏற்பட்டது. பாஜக வரக்கூடாது என காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் வரக்கூடாது என பாஜகவும் போட்டி போட்டு பிராந்திய கட்சிகளின் உதவியை நாடின.
சிவசேனா, அகாலிதளம், லோக் தளம் போன்ற கட்சிகள் காங்கிரஸை எதிர்த்து உருவானது என்பதால் அக்கட்சிகளுக்கும் பாஜகவை ஆதரிப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை. அப்படி பல மாநிலங்களில் பாஜக நுழைவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த பிராந்திய கட்சிகள் முற்றிலும் அழிந்துவிட்டன என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எங்களால் மாநிலத்தில் வளர்ந்த பாஜக தற்போது எங்களையே அழிக்கப் பார்க்கிறது என சமீபத்தில் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டதையும் மேற்சொன்னதையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இன்னும் குறிப்பாக, “எந்த மாநிலத்தில் தனியாக நின்று ஆட்சியமைக்க முடியாது என பாஜக நினைக்கிறதோ, அந்த மாநிலங்களில் கூட்டணியை உருவாக்கி, பின் படிப்படியாக கூட்டணியை ஓரம்கட்டி பின் கூட்டாளி விட்டுச் சென்ற இடத்தை ஆக்கிரமிக்கிறது. இதில் பாஜகவின் அடுத்த சோதனைக்களம் தமிழ்நாட்டில் இருக்கலாம்” என்றும் குறிப்பிடுகின்றனர்.
ரஜினி கோத்தாரி 1967க்கு முந்தைய இந்தியாவின் அரசியலை ஒற்றைக் கட்சி ஆதிக்க அமைப்பு (ONE PARTY DOMINANT SYSTEM) என குறிப்பிடுகிறார். ஆனால், இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவே அதன் 'கூட்டாட்சித் தத்துவம்' (Federalism) தான். தற்போதைய டெல்லியின் நகர்வுகள் அந்த ஆன்மாவை 'ஒற்றையாட்சி' (Unitary System) நோக்கி நகர்த்துகிறதா என்ற ஐயம் எழாமல் இல்லை. பிராந்திய கட்சிகளின் பலவீனமும், எம்பிக்களின் தொடர் ராஜினாமக்களும் எண்களை மையப்படுத்திய விளையாட்டு அல்ல; அது இந்தியாவின் பன்முகத்தன்மையை மாற்றி எழுதும் ஒரு நீண்டகால உத்தியின் தொடக்கம். இந்த இடத்தில்தான் இந்தியா கூட்டணியின் பங்கு முக்கியமானதாகிறது. பாஜகவின் அசுர வளர்ச்சியின் முன் பாஜகவை வீழ்த்த வேண்டுமென்று இக்கட்சிகள் ஒன்றிணைந்தாலும், பாஜகவையும் காங்கிரஸ் கட்சியையும் வேறுபடுத்திக் காட்டுவதற்கு சில அம்சங்கள் வேண்டுமென்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
எதிர்க்கட்சிகளுக்கான நோக்கம்
விசிக எம்பி ரவிக்குமார் மின்னம்பலம் இணையத்தில் இது தொடர்பாக எழுதிய கட்டுரையில், “கூட்டாட்சி என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று என்பதையும், மதச்சார்பின்மை மட்டுமே பாஜகவிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டப் போதுமானதல்ல என்பதையும் காங்கிரஸ் உணரும்போதுதான், மாநிலக் கட்சிகளின் முக்கியத்துவத்தை அது உண்மையாகப் புரிந்துகொள்ளும். கூட்டாட்சிக் கோட்பாட்டை ஏற்பதில் காங்கிரஸ் தொடர்ந்து தயக்கம் காட்டினால், அது பாஜகவுக்கான மாற்று அரசியல் சக்தியாகப் பார்க்கப்படுவதற்குப் பதிலாக, பாஜகவின் பதிலியாக ( substitute) மட்டுமே மாநிலக் கட்சிகளால் கருதப்படும் அபாயம் உள்ளது” எனக் குறிப்பிடுகிறார்.
ஜூன் மாத இறுதியில் வரவிருக்கும் மத்திய அமைச்சரவை மாற்றமும், பா.ஜ.க-வின் புதிய தேசிய நிர்வாகிகள் குழு அறிவிப்பும் பெரும்பான்மையைப் பெறுவதற்கான உத்தியை மேலும் வேகப்படுத்தும் என்றே தோன்றுகிறது. ஏனெனில், புதிதாக கூட்டணிக்கு ஆதரவளித்த எம்பிக்களுக்கு விரிவாக்கப்படும் புதிய அமைச்சரவையில் வாய்ப்பளிக்கபடுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. இந்த உத்தி மேலும், பல பிராந்தியங்களில் இருந்து எம்பிக்களை ஈர்க்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல கட்சித் தலைவர்கள் தங்களது சொந்த கட்சியினரை தக்கவைக்க படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
வெல்லப்போவது எது?
தொகுதி மறுவரையறை மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், அது பிராந்திய கட்சிகளின் செயல்பாட்டிற்கே மிகப்பெரிய சவாலாக மாறும். இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் தற்போதைய தவெக அரசாங்கம் இந்த டெல்லி ஆதிக்கத்தை எவ்வாறு கையாளப் போகிறது? திமுகவும், அதிமுகவும் பா.ஜ.க-வின் இந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்ளப் போகின்றன? மாநில உரிமைகளைப் பேசி வளர்ந்த கட்சிகள், தங்களின் தனித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போகின்றனவா அல்லது டெல்லியின் அரசியல் சூறாவளியில் தடம் தெரியாமல் கரையப் போகின்றனவா என்பதைத் தமிழ்நாட்டின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளே தீர்மானிக்கும்.
NOTE THIS POINT... டெல்லி எப்போதுமே ஒற்றைத் தன்மையை நம்பும் சூழலில் மாநிலங்களோ தங்களின் உரிமைகளை நம்புகின்றன. இந்த இருமுனைப் போட்டியில் வெல்லப்போவது 'ஒற்றை இந்தியாவா' அல்லது 'ஒன்றிணைந்த மாநிலங்களின் இந்தியாவா' என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!"

