ஓட்டுநர் இல்லா மெட்ரோ.. பெங்களூருவில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் ஆர்.வி.சாலை முதல் பொம்மசந்திரா வரையிலான புதிய தடத்தில், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். இதேபோல் பெங்களூரு - பெலகாவி, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி காட்ரா - அமிர்தசரஸ், நாக்பூர் - புனே இடையேயான 3 வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 150ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 ஆயிரத்து 610 கோடி ரூபாய் மதிப்பில் பெங்களூரு மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து மெட்ரோ ரயிலில் பள்ளி மாணாக்கருடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் சிறிது தூரம் பயணித்தார்.
திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் தொழில்நுட்ப திறன் காரணமாகவே ஆபரேஷன் சிந்தூரில் சில மணி நேரங்களில் பாகிஸ்தானை வீழ்த்த முடிந்ததாகவும், ஆபரேஷன் சிந்தூரின் போதுதான் இந்தியாவின் உண்மையான திறனை உலகம் கண்டதாகவும் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியில் பெங்களூரு இளைஞர்களின் பங்கு முக்கியமானது என்றும் குறிப்பிட்டார். உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாகவும், அதன் வேகம் பிறர் பார்த்து பொறாமை கொள்ளும் அளவுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியா தனது நலன்களுக்கு முன்னுரிமை தர வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்