தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணமா? | ”அதே பெரியண்ணன் மனப்பான்மை..” - ஒவ்வொன்றாக விளக்கிய பெருமாள் மணி!
பீகார் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக்குத் தேவையான 122 இடங்களை தாண்டி 190 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. மகா கட்பந்தன் கூட்டணி 38 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இவ்வாறு, கடந்த தேர்தலை விட மோசமான தோல்வியை நோக்கி மகா கட்பந்தன் சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேசிய, அரசியல் விமர்சகர் பெருமாள் மணி, ”காங்கிரஸ் பெரிய அண்ணன் மனப்பாண்மையில் நடந்து கொண்டதே, பிகார் தேர்தலின் பின்னடைவுக்கு காரணம்” என தெரிவித்துள்ளார். அது குறித்துப் பார்க்கலாம்...
அரசியல் விமர்சகர் பெருமாள் மணி பேசியதாவது, “பீகார் தேர்தல் பல அடிப்படை அரசியல் நடைமுறைகளை மாற்றியமைத்திருக்கிறது. கடந்த, தேர்தலை விட இந்த முறை 10 சதவீத வாக்கு அதிகரித்திருக்கிறது. 5 சதவீத வாக்கு அதிகரித்தாலே பீகாரில் ஆட்சி மாற்றம் என்பது நடக்கும். ஆனால், இந்த முறை 10 சதவீத வாக்கு அதிகரித்திருந்தாலும், அது ஆட்சி மாற்றத்திற்கு வித்திடவில்லை. கடந்த தேர்தலில் அதே முடிவு தான் வந்திருக்கிறது.
மேலும், இந்த பீகார் தேர்தல் என்பது பாரதிய ஜனதா கட்சி ஒரு மாநிலத்தை அல்லது ஒரு தேர்தலை எப்படி அணுகுகிறது என்பதற்கான ஒரு உதராணம். கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியை எண்டிஏ கூட்டணியில் பாஜக கொண்டு வந்தது. அவர்களுக்கு 29 தொகுதிகளை ஒதுக்கிய போது, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி அதிருப்தி தெரிவித்த போது, அதையும் பாஜக பேசி தீர்த்தது. அதேபோல, 101 இடங்களை பாஜகவும், 101 தொகுதிகளை ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் பகிர்ந்து கொண்டார்கள். தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடும் வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பே முடிந்துவிட்டது.
கூட்டணியை ஒருங்கிணைக்காத காங்கிரஸ்
ஆனால், அப்படியே காங்கிரஸ் கூட்டணியை பார்க்கும் போது, இந்தியா முழுமைக்கும் இண்டியா கூட்டணி என்று பெயர் வைத்திருக்கும் போது, எதற்கு பீகாரில் மட்டும் மகா கட்பந்தன் என்ற பெயர் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. இண்டியா கூட்டணியைச் சார்ந்த ஜே.எம்.எம் கட்சி ஹரியானாவில் ஆட்சியில் இருக்கிறது. அங்கு காங்கிரஸும் கூட்டணியில் இருக்கிறது. அவர்கள், எல்லைப்புற மாவட்டங்களில் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது எனக் கூறி இண்டியா கூட்டணியில் போட்டியிடுவதற்கு 5 தொகுதிகள் கேட்டு கடிதம் எழுதியது. ஆனால், அந்த கடிதம் என்ன ஆனது என்று தெரியவில்லை. இறுதியில், அவர்கள் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறி சென்றுவிட்டார்கள்.
AIMIM-ன் தலைவர் ஒவைசி ஆறு இடங்களை கொடுக்கும்படி கேட்டார். சீமாஞ்சல் பகுதியில் 70 முஸ்லீம் இருக்கிறார்கள். ஆனால், அவரையும் காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டுவரவில்லை. இதற்கெல்லாம் காரணம் ஆர்.ஜே.டி கிடையாது. காங்கிரஸ் தான் காரணம்.
பெரியண்ணன் மனப்பாண்மை !
காங்கிரஸ் பெரியண்ணன் மனப்பாண்மையில் இருந்து செயல்பட்டது. ராகுல் காந்தி “வாக்காளர் அதிகார யாத்திரை” என்ற பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது அதில், தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார். ஆனால், அடுத்த நாளே தேஜஸ்வி யாதவ் தொடங்கிய பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவில்லை. 36 வயதில் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குகிறார். 1990 காலக்கட்டத்தில் இருந்தே லாலு பிரசாத் யாதவ் காங்கிரஸுக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் பெறுவது கூட முடிந்த பிறகு தான் கூட்டணியை உறுதி செய்கிறது.
50 வருடம் இந்தியாவை ஆண்ட கட்சி, பாஜகவை எதிர்க்க வேண்டும் என நினைக்கிறவர்களெல்லாம் காங்கிரஸை நம்பியே வருகிறார்கள். ஆனால், தேஜஸ்விக்கு வாய்ப்பு இருக்கிறது என்று களத்தில் இருக்கும் பிரசாந்த் கிஷோர் கூறுகிறார். ஆனால், இரண்டாம் கட்ட வேட்பாளர் மனுத் தாக்கல் நிறைவடையும் போது தான், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் தேஜஸ்வி யாதவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார்.
இவ்வாறு, காங்கிரஸ் கட்சியால் கூட்டணியை சீர் செய்ய முடியவில்லை, முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. பிரச்சாரத்தை வேகமாக தொடங்கவில்லை இவ்வாறு, காங்கிரஸே பிகார் பின்னடைவுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களிடம் எளிமையாக நடந்து கொள்கிறார். நன்றாக உரையாடுகிறார். ஆனால், அவர் கூட்டணி கட்சிகளை கையாள்வதில் சிக்கல் இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

