குளிர்கால கூட்டத்தொடர் இறுதிநாள்: வழிமறிக்கப்பட்ட அமித்ஷாவின் கார்.. கடுமையாக கண்டித்த சபாநாயகர்!
செய்தியாளர் ராஜீவ்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டதொடரின் இறுதி நாளான இன்று மக்களவை கூடிய சில நொடிகளில் தேதி குறிப்பிடாமல் நாட்டுப்பண் இசைக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், மக்களவையில் சில நொடிகள் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவையின் கண்ணியம், ஒழுக்கம், பெருமை உள்ளிட்டவற்றை அவையின் ஒவ்வொரு உறுப்பினர்களும் காப்பாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இனிவரும் நாட்களில் எந்த ஒரு வாயிலிலும் அவைக்கு உள்ளே அல்லது வெளியே நின்று ஆர்ப்பாட்டம் / போராட்டம் உள்ளிட்டவை நடத்தக் கூடாது எனவும், இது முறையான அணுகுமுறை அல்ல எனவும் ஓம் பிர்லா தெரிவித்தார். மக்களவை உறுப்பினர்களை இறுதியாக எச்சரிப்பதாகவும் நாடாளுமன்ற விதிமுறைகளை மிகத் தீவிரமாக பின்பற்ற வேண்டும், இல்லையெனில் உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஓம் பிரலா எச்சரித்தார்.
முன்னதாக நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சியினரை நாடாளுமன்ற வளாகத்திற்கு உள்ளே நுழைய விடாமல் ஆளும் கட்சியினர் தடுத்ததாக கூறி தள்ளுமுள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து இறுதி நாளான இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே விஜய் சவுக் பகுதியில் I.N.D.I.A. கூட்டணி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமித்ஷாவை கண்டித்து, தனது அமைச்சர் பதவியை அவர் ராஜனாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாக நாடாளுமன்றத்திற்குள் சென்றனர்.
அந்நேரம் , நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வாகனத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மரித்து கோஷம் எழுப்பிய நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக உள்துறை அமைச்சரின் வாகனத்தை மட்டும் உள்ளே அனுப்பி வைத்தனர். பின்பு பேரணியாக சென்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்குள் சென்றனர்.