உடைந்த பாகிஸ்தானின் மிகப்பெரும் அணை : சீறிப்பாய்ந்த வெள்ளம்.. பின்னணியில் சீன நிறுவனம்?
பாகிஸ்தானின் தார்பேலா அணையின் 5-வது நீர்மின் திட்டத்தில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சீன நிறுவனத்தின் கட்டுமானப் பிழை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், சிந்து நதியின் (Indus River) குறுக்கே கட்டப்பட்டுள்ள தார்பேலா அணை (Tarbela Dam) பாகிஸ்தானின் மிகப்பரிய அணையாக திகழ்ந்து வருகிறது . 143 மீட்டர்கள் உயரம் கொண்ட இந்த அணை கான்ஃக்ரீட் சுவர்களுக்குப் பதிலாக இயற்கையான பாறைகள், சரளைக் கற்கள் மற்றும் களிமண் கொண்டு அடர்த்தியாக நிரப்பப்பட்டு நீரைத் தேக்கும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த வகையில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரும் அணை என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
தற்போது வரை இதில் சுமார் 4,888 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஒட்டுமொத்த நீர்மின் உற்பத்தியில் பெரும் பகுதியை இந்த ஒரு அணை மட்டுமே பூர்த்தி செய்கிறது. இதனால் பாகிஸ்தானிலேயே முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த அணை கருதப்படுகிறது.
இந்த நிலையில், தார்பேலா அணையின் 5-வது விரிவாக்க நீர்மின் திட்டத்தில் உள்ள ஒரு தடுப்புச் சுவர் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. தடுப்புச் சுவர் உடைந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அந்த பகுதியில் இருந்த இயந்திரங்கள் மற்றும் கட்டுமானங்கள் அடித்துச்செல்லப்பட்டன. இந்த தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் வெளியேறிய நீர் முழுவதும் ஆற்றுப்பாதை வழியே வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த கட்டுமானப் பணிகளை சீனாவின் 'Power Construction Corporation of China Limited' (PCCCL) நிறுவனம் மேற்கொண்டு வந்த நிலையில், அந்த நிறுவனத்தின் தவறே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2025-ம் ஆண்டும் இந்த அணையில் இதே போன்ற விபத்து நடைபெற்றது. அப்போது விசாரணை நடத்திய பாகிஸ்தான் நீர் மற்றும் மின் மேம்பாட்டு ஆணையம் (WAPDA), அசல் வடிவமைப்பை மாற்றி பலவீனமான வடிவமைப்பைச் சீன நிறுவனம் பயன்படுத்தியதும், தகுந்த பரிசோதனையின்றி இதற்கு அனுமதியளித்ததுமே விபத்திற்கு முக்கியக் காரணம் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

