முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்|பிஹார் தேர்தல்: விஷமமே புதிய கலை!
இந்தியாவிலேயே மிகச் சிறந்த ‘அரசு நிறுவனம்’ எதுவென்று 1991 முதல் 1996 வரையில் மக்களிடையே கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தியிருந்தால், அரசமைப்புச் சட்டப்படி அமைந்த நீதிமன்றங்களைவிட - ‘இந்திய தேர்தல் ஆணையமே’ சிறந்தது என்று கூறியிருப்பார்கள். அப்போது தேர்தல் ஆணையத் தலைமை தேர்தல் அதிகாரியாகப் பதவி வகித்த டி.என்.சேஷன்தான் இதற்கு முக்கியக் காரணம். தேர்தல் ஆணையத்தின் ‘சுதந்திரமான செயல்பாடு’, ‘நேர்மை’, ‘எவர் பக்கமும் சாயாத நடுநிலை’ ஆகியவற்றை அவர் நிலைநாட்டினார் என்று அனைத்துத் தரப்பினருமே பாராட்டினர்.
சேஷனுக்குப் பிறகு அந்த மூன்று பண்புகளை வெகு தீவிரமாகக் கடைப்பிடித்தவர்கள் எம்.எஸ்.கில், ஜே.எம்.லிங்டோ, டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நவீன் சாவ்லா மற்றும் எஸ்.ஒய்.குரேஷி. ஏனைய தலைமைத் தேர்தல் ஆணையர்கள் ‘அங்குமிங்குமாக’ மாறி மாறிச் செயல்பட்டனர் – சில வேளைகளில் ஆள்வோரின் கட்டளைகளுக்கு அப்படியே அடிபணிந்தனர், சில சமயம் அவ்வாறு முழந்தாளிட்டு கீழ்ப்படிய மறுத்தனர். கடந்த 12 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர்களை, அரசமைப்புச் சட்டம் கொண்டு உரசிப் பார்த்தால் பெருமளவு கேடு நிகழ்ந்துவிட்டதை அறியலாம்.
சுயேச்சைத் தன்மை
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் என்பது சுயேச்சையாகச் செயல்பட வேண்டிய அரசின் அமைப்பு. நாடு சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலங்களில் தேர்தல் நடத்துவது பெரிய சவாலாக இருந்ததில்லை. உள்ளூர் தலைக்கட்டுகள் அல்லது தலைவர்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு மக்கள் வாக்களித்தனர்; மக்களில் சில பிரிவினர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை; அவர்கள் ஏழைகளாகவும் செல்வாக்கில்லாதவர்களாகவும் இருந்ததால் அவர்கள் யாரிடமும் அதுபற்றிப் புகார் செய்ததில்லை, காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் களத்தில் ‘பெரிய போட்டியாளர்’ என்று எந்த அரசியல் கட்சியும் இல்லை.
1967-ம் ஆண்டுக்குப் பிறகுதான் பொதுத் தேர்தல்களை நடத்துவது அரசுக்கு சவாலாக மாறியது. 1965 முதல் 2014 வரையிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் எந்த அரசும் அதிகாரம் செய்ததே இல்லை. அரசுகள் தலையிட்டதாகக் கூட நான் எந்தப் புகாரையும் கேள்விப்பட்டதில்லை. சில மாநில சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தல்களில் ‘மோசடிகள்’ – ‘வாக்காளர் எண்ணிக்கையில் கணிசமான உயர்வுகள் அல்லது குறைப்புகள்’ ஏற்பட்டதாக புகார்கள் வந்திருக்கின்றன. அந்தப் புகார்கள் ஒன்றிய அரசை ஆண்ட காங்கிரஸ் கட்சி மீது கூறப்படவில்லை, இந்திய தேர்தல் ஆணையத்தின் திறமைக்குறைவைதான் அவை சுட்டிக்காட்டின.
மக்களவைக்கு 2014-ல் நடந்த தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் இருந்தது. அதற்குப் பிறகு மக்களவைக்கு நடந்த பொதுத் தேர்தல்களும் மாநில சட்டப்பேரவைகளுக்கு நடந்த பொதுத்தேர்தல்களும் பரவலாக, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாயின, திறமைக் குறைவாக அதிகாரிகள் செயல்பட்டனர், மோசடிகள் நிகழ்ந்தன, வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளைச் செய்தனர், இன்னும் பல தீமைகள் இடம் பெற்றதாகக்கூட குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்தியத் தேர்தல் ஆணையம் 2014 முதல், மிகப் பெரிய சவால்களைச் சந்தித்துவருகிறது, அதனுடைய நற்பெயர் பெருமளவுக்கு களங்கப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு 2024 நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் பெரும் எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாகவும் வாக்களிப்பிலேயே மோசடிகள் நடந்ததாகவும் பலத்த சர்ச்சைகள் ஏற்பட்டன. வாக்காளர் பட்டியலில் வழக்கத்துக்கு மாறாக புதிய வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டனர் – அவர்களில் பெரும்பகுதியினர் உண்மையில் அந்தந்த தொகுதிகளின் வாக்காளர்களே இல்லை, வாக்களிப்பதற்கான நேரம் முடியும்போது வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது என்பவை முக்கியமான குற்றச்சாட்டுகள். அவ்விரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து தனது நிலையை விளக்க தேர்தல் ஆணையம் முயற்சிகளை மேற்கொண்டது, ஆனால் இன்றுவரை அதில் தெளிவான முடிவு ஏற்படவில்லை.
நேர்மை
அடுத்ததாக மிகவும் கடுமையாக அரசியல் கட்சிகள் மோதும் தேர்தல் களம் பிஹார் மாநிலத்தில் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டில் மேலும் சில மாநிலங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிஹார்தான் இப்போது முதல் சோதனைக் களம். வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில், மாநிலம் முழுவதிலும் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (எஸ்ஐஆர்) என்ற பெயரில் பட்டியலைத் தயாரிக்கும் வேலையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இது வழக்கத்துக்கு மாறானது மட்டுமல்ல, இதுவரை இப்படி நிகழ்ந்ததும் இல்லை. வாக்காளர் பட்டியல்கள் வழக்கமாக ஜனவரி முதல் நாளையொட்டி புதுப்பிக்கப்படும், அந்தந்த மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெறும் சமயத்தில் தேவையான திருத்தங்கள் அதில் மேற்கொள்ளப்படும். வாக்களிக்கும் வயதை எட்டிய புதிய வாக்காளர்கள், பட்டியலில் சேர்க்கப்படுவர்;
இதுவரை வாக்களிக்காதவர்களும், பெயர் விடுபட்டுப் போனவர்களும் பட்டியலில் இடம்பெறுவர்; இறந்த வாக்காளர்களின் பெயர்கள், அல்லது வேறு மாநிலங்களுக்கு அல்லது நாடுகளுக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தவர்களின் பெயர்கள் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு, பட்டியலிலிருந்து நீக்கப்படும். இவ்வாறு வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதும் நீக்குவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் அறியும் வகையிலும் அந்த நடைமுறைகளில் அவை பங்கேற்கும் வகையிலும் நடைபெறும். ஒவ்வொரு பெயரைச் சேர்ப்பதும் கவனமாக மேற்கொள்ளப்படும்; பெயர்களை நீக்குவதும் சம்பந்தப்பட்ட தரப்பிடமிருந்து முழுமையான தகவல்களைப் பெற்ற பிறகு அல்லது விசாரணைக்குப் பிறகே மேற்கொள்ளப்படும்.
பிஹாரில் தேர்தல் ஆணையம் இப்போது மேற்கொண்டுள்ள ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (எஸ்ஐஆர்) வித்தியாசமாக இருக்கிறது. இந்த திருத்தமானது இப்போதுள்ள வாக்காளர் பட்டியலையே செல்லாததாக்குகிறது. ‘சிறப்பு தீவிர திருத்தம் 2003 வாக்காளர் பட்டியல் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்படுகிறது’ என்று தேர்தல் ஆணையம் கூறினாலும், இது பூஜ்ய அடிப்படையில் – அதாவது ஆரம்பத்திலிருந்து தொடங்குவதாக – ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கிறது. தான் உண்மையான வாக்காளர்தான் என்பதை நிரூபிக்கும் பொறுப்பை வாக்காளரின் தலையிலேயே சுமத்துகிறது. நடப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும், 2020-ல் நடந்த பிஹார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் - 2024 மக்களவை பொதுத் தேர்தலிலும் வாக்களித்திருந்தாலும், வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு இருந்தாலும், திருத்தப்படும் புதிய வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரைச் சேர்க்க ஆணையம் குறிப்பிடும் ஆவணங்களைத் தந்து தாங்கள் இந்தியக் குடிமக்கள்தான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. இவை அனைத்தையும் ஜூன் 25 தொடங்கி ஜூலை 26-க்குள் செய்து முடித்துவிட வேண்டும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது.
ஒரு சால் கோடாமை
ஆணையத்தின் இந்த நடைமுறை, அனைவரும் வாக்காளர் பட்டியலில் எளிதாக இடம் பெற வேண்டும் என்பதற்காக அல்ல, வாக்காளர் பட்டியலில் இடம் பெறவும் - பிறகு வாக்களிக்கவும் ஏராளமான தடைகளை உருவாக்குவதற்காகத்தான். குடிமக்கள்தான் என்பதை நிரூபிக்க 11 ஆவணங்களைத் தர வேண்டும் என்கிறது ஆணையம்: அவற்றில் நான்கில், ‘வாக்காளர் எங்கு பிறந்தார்’ என்ற தகவல் இடம் பெற்றிருக்கவில்லை. வேறு இரண்டு ஆவணங்கள் பிஹாரில் வாழ்வோர் எவருக்குமே தரப்பட்டதில்லை. எனவே மாநில வருவாய்த்துறை அதிகாரிகள் அளிக்கும் ‘சாதிச் சான்றிதழ்’ உள்பட ஐந்து ஆவணங்கள்தான் மிஞ்சியுள்ளன. கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்), பிறப்புச் சான்றிதழ், அரசு ஊழியர் என்பதற்கான அடையாளச் சான்று ஆகியவை பிஹாரின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 2.4% முதல் 5% பேரிடம்தான் இருக்கின்றன.
‘ஆதார்’, தேர்தல் ஆணையம் முன்னர் அளித்த ‘வாக்காளர் அடையாள அட்டை’, குடிமைப் பொருள்களைப் பெறுவதற்கான ‘ரேஷன் அட்டை’ ஆகியவற்றை உரிய ஆவணங்களாக ஆணையம் பரிந்துரைக்கவில்லை. இந்த மூன்றையும் ஏன் சான்று ஆவணங்களாகப் பட்டியலில் சேர்க்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் சமீபத்திய வழக்கு விசாரணையில் கேட்டபோது, ஆணையத்திடமிருந்து தெளிவான பதில் இல்லை. இதில் வினோதம் என்னவென்றால், சாதிச் சான்றிதழும் குடியிருப்புச் சான்றிதழும் மாநில வருவாய்த்துறை அதிகாரிகளால் ‘ஆதார்’ அட்டையின் அடிப்படையில்தான் வழங்கப்படுகின்றன! சாதிச் சான்றிதழும் குடியிருப்புச் சான்றிதழும் செல்லுபடியாகும் - ஆனால் அவற்றை வழங்குவதற்கே அடிப்படையாக இருக்கும் ‘ஆதார் கார்டு’ தகுதியற்ற ஆவணமாகக் கருதப்படுகிறது!
‘சிறப்பு தீவிர திருத்த’ நடவடிக்கையில் ஏற்கும்படியான ஒரே பகுதி எதுவென்றால் - இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, ஒரே வாக்காளரின் பெயர் இன்னொரு பட்டியலிலும் இருந்தால் அதை நீக்குவது - என்பதுதான். பிஹாரிலிருந்து பிழைப்புக்காக 17.5 லட்சம் வாக்காளர்கள் குடிபெயர்ந்துவிட்டார்கள் என்று ‘இந்திய தேர்தல் ஆணையம்’ மதிப்பிட்டுள்ளது. அவர்கள் பிஹாரில் இல்லை என்றோ, பிஹாருக்கே இனி திரும்பமாட்டார்கள் என்றோ பொருள் இல்லை. புதிய வாக்காளர்கள் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கான படிவத்தைத் தந்துள்ள பிஹார் தலைமைத் தேர்தல் அதிகாரி இதற்கு ஜூலை 15 முதல் ஜூலை 26 வரை மட்டுமே அவகாசம் தந்திருக்கிறார்!
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின் நோக்கமானது தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்து கொள்வதும், தேர்தலில் வாக்களிப்பதும் அல்ல என்ற முடிவுக்கே இதனால் வர வேண்டியிருக்கிறது. ஏழைகள், விளிம்புநிலை மக்கள், பிழைப்புக்காக இடம் பெயரும் குடிமக்களில் லட்சக்கணக்கானோருக்கு வாக்குரிமையைப் பறித்து அவர்களை வாக்காளர் பட்டியிலிருந்தே வெளியேற்றும் வஞ்சகமான, தீய சதி தான் இந்த நடவடிக்கை. ஜூலை 28-ல் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்கிறது என்று காத்திருப்போம்.