உண்மை மறைப்பு.. போலி கையெழுத்து.. SIR படிவம் தாக்கல்.. நாட்டிலேயே உபியில் முதல் FIR!
உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் சிறப்புப் பட்டியலில் தவறான விவரங்களைச் சமர்ப்பித்ததற்காக ஒரு குடும்பம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு முதற்கட்டமாகத் தொடங்கப்பட்ட இப்பணி, 2வது கட்டமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில்நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் சிறப்புப் பட்டியலில் தவறான விவரங்களைச் சமர்ப்பித்ததற்காக ஒரு குடும்பம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் ராம்பூர் மாவட்டம், ஜ்வாலா நகரைச் சேர்ந்தவர் நூர்ஜஹான். இவரது மகன்கள், ஆமிர் கான் மற்றும் டேனிஷ் கான். இவர்கள் இருவரும் துபாய் மற்றும் குவைத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அந்த தாய் SIR படிவங்களை தவறான விவரங்களுடன் நிரப்பி, தனது மகன்களின் போலியான கையொப்பங்களுடன் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார். வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், படிவங்களை டிஜிட்டல் மயமாக்கியபோது இந்த முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. அதன்பேரில், அவர்கள் மூவரின் பேரிலும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறான தகவல்களுடன் படிவங்களை தாக்கல் செய்வது அல்லது உண்மைகளை மறைப்பது தேர்தல் விதிகளை கடுமையாக மீறுவதாகும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

