வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தம்.. “இதெல்லாம் நடக்கக்கூடும்..” அமர்த்தியா சென் விடுத்த எச்சரிக்கை!
தேர்தல் ஆணையம் தேசிய அளவில் விரைவாக நடத்தவிருக்கும் தீவிர சிறப்பு திருத்தம் நடவடிக்கைக்கு, நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் அமர்த்தியா சென் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள அவர், தேர்தல் பட்டியல் திருத்தம் சீர்திருத்தமாக இருப்பது நல்லதுதான் என தெரிவித்துள்ளார். ஆனால், வழிகாட்டும் ஆவணங்கள் இல்லாத ஏழை மக்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கம், வகுப்புவாத பாகுபாடு போன்றவை ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்டார்.
புதிய பட்டியலில் பிழைகளை குறைக்க முயற்சிக்கும்போது அதைவிட மோசமான பிழைகள் சேரும் அபாயம் உள்ளது என்று தெரிவித்துள்ள அமர்த்தியா சென், இது தேர்தலின் நம்பகத்தன்மையை குலைக்கும் என அவர் எச்சரித்தார். சில பிரதேசங்களைச் சேர்ந்த குடிமக்களின் குரலை ஒடுக்கும் திட்டமிட்ட முயற்சி ஏதேனும் இருக்கும்பட்சத்தில் அது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் சென் கடுமையாக கூறினார். இவ்வாறான சந்தேகங்களை ஏற்படுத்தாதவாறு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என்றும், இந்திய மக்களுக்கு நீதிமன்றமே இறுதிக் காப்பாளர் என்றும், உச்ச நீதிமன்றம் கண்காணிப்பு செய்ய வேண்டிய கடமை உண்டும் என்றும் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.