மன சமநிலையை இழந்து விட்டார் என பேச்சு.. கார்கேவிடம் மன்னிப்பு கேட்ட நட்டா!
நேற்று மக்களவையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக காரசார விவாதம் நடைப்பெற்றது. மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி என பல அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களையும் , கேள்விகளையும் முன்வைத்தனர்.
இந்தவகையில், மாநிலங்களவையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, பஹல்காம் தாக்குதல் தொடர்பான விவாதத்தின்போது, பிரதமர் மோடி மீதான விமர்சனங்களை முன்வைத்தார்.
கார்க்கேவின் 1 மணி நேர பேச்சுக்கு பிறகு, அவையின் முன்னவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா, கார்கேவுக்கு மனநிலை பிறழ்ந்து விட்டதாக ஆவேசமாக கடுமையாக விமர்சித்தார்.
நட்டாவின் பேச்சுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
ஜே.பி.நட்டா பேசிய பிறகு எழுந்த கார்கே, ஜே.பி.நட்டா தன்னை மனநிலை சரியில்லாதவர் என்று குறிப்பிட்டது வருத்தமளிப்பதாகக் கூறினார். தற்போதுள்ள பாஜக அரசில் தான் மதிக்கும் ஒரு சில அமைச்சர்களில் நட்டாவும் ஒருவர் என்றும், அவரே இப்படிப் பேசியது வெட்கக்கேடானது என்றும் குறிப்பிட்டார். இதனையடுத்து, கார்கே குறித்த தனது கருத்துகளை திரும்பப்பெற்று, தனது பேச்சுக்காக நட்டா மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, பிரதமர் குறித்த கார்கேவின் கருத்துக்களை அவைப் பதிவேடுகளில் இருந்து நீக்க வேண்டும் என்று நட்டா கோரினார்.
"பிரதமர் மோடி உலகில் மிகவும் பிரபலமான தலைவர், பாஜக மட்டுமல்ல, தேசமும் அதைப் பெருமையாகக் கருதுகிறது. நான் ஏற்கெனவே என் வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுவிட்டேன், ஆனால் அவரது (கார்கே) உணர்வுகளை நான் புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இருப்பினும், கார்கே தனது வரம்புகளை மீறி, பிரதமருக்கு எதிராக உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துக்களைத் தெரிவித்தார், அவற்றை நீக்க வேண்டும்" என்று நட்டா கூறினார்.