கற்றல் திறன் குறித்த ஆய்வு.. 6ஆம் வகுப்பில் 10ஆம் வாய்ப்பாடு வரை அறிந்தோர் 53% பேர்!
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 53 விழுக்காட்டினர் மட்டுமே 10ஆம் வாய்ப்பாடு வரை அறிந்திருக்கிறார்கள் என மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் நாள் நடத்தப்பட்ட ஆய்வில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், 781 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் என மொத்தம் 74 ஆயிரத்து 229 பள்ளிகளைச் சேர்ந்த 21 லட்சத்து 15 ஆயிரத்து 22 மாணாக்கர் பங்கேற்றனர்.
3,6 மற்றும் 9 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் திறன் அறியப்பட்ட நிலையில், 3ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களில் 55 விழுக்காட்டினர் மட்டுமே 99 வரையிலான எண்களை ஏறு அல்லது இறங்கு வரிசையில் அமைக்கும் திறன் பெற்றிருந்தது தெரியவந்தது. 3ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் 58 விழுக்காட்டினர் மட்டுமே இரு இலக்க எண்களை கூட்டுதல் மற்றும் கழித்தலை அறிந்திருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல் 6ஆம் வகுப்பில் பயில்வோரில் 53 விழுக்காட்டினரே 10ஆம் வாய்ப்பாடு வரையில் அறிந்திருந்ததும் தெரியவந்துள்ளது.