ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் 100/100 மதிப்பெண்.. எப்படி சாத்தியம்..?
செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை 624 மாணவர்கள் எழுதியுள்ளனர். அதே போன்று தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இதே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியான சூழலில், இந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 167 மாணாக்கர் வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில், வேதியியல் பாடத்தின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததா என சந்தேகம் எழுந்துள்ளது.
விளக்கமளித்த மாவட்ட கல்வி அலுவலர்..
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் அறிவழகனிடம் கேட்ட போது, பள்ளியில் பணியில் இருந்த ஆசிரியர்கள், கல்வி அலுவலரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேநேரம், வினாத்தாள் எதுவும் கசியவில்லை என்றும், தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தனிக் குழு அமைக்க வேண்டுமென கல்வி ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.