ஹைதராபாத் | கெட்டுப்போன இறைச்சியை சாப்பிட்ட ஒருவர் உயிரிழப்பு.. 9 பேர் மருத்துவமனையில் அனுமதி!
தெலுங்கானா சாலை போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராகப் பணியாற்றி வந்தார் ஸ்ரீனிவாஸ் யாதவ். இவருக்கும் இவரது குடும்பத்தில் உள்ள மற்ற அனைவருக்கும் திடிரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் வயிற்று வலி தாங்க முடியாமல் ஸ்ரீனிவாஸ் யாதவ் இறந்துவிட்டார்.
இவர், முதலில் சிகிச்சைக்காக தர்னாக்காவில் உள்ள ஆர்.டி.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் மேம்பட்ட மருத்துவமனைக்குச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அப்படி வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, வழியிலேயே அவர் இறந்துவிட்டார் என்று மாவட்ட சுகாதார அலுவலர் ரங்காரெட்டி மற்றும் மருத்துவர் வெங்கடேஷ்வர்லு ராவ் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ஹைதராபாத்தில் கடந்த 20ஆம் தேதி (திங்கட்கிழமை ) போனலு பண்டிகையை ஒட்டி ஸ்ரீனிவாஸ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் சமைத்த கோழி மற்றும் ஆட்டு இறைச்சியை சாப்பிட்டுள்ளனர். பின்னர் மீதமுள்ள இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து மறுநாளும் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் வயிற்றுப்போக்கால் அவதியடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஸ்ரீனிவாஸ்சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மற்ற அனைவரும் மருத்துவமனையில் உள்ளனர்.
நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வயிற்றுப்போக்கு மற்றும் பிற உணவு விஷத்தின்அறிகுறிகளைக் கொண்டிருந்தனர். இதில் கவுரம்மாவும் ஜஸ்விதாவும் ஐசியுவில் கவலைக்கிடமாக உள்ளனர். மற்ற ஏழு பேரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இது குறித்து வனஸ்தலிபுரம் காவல் நிலையத்தில் பிரிவு 194 (சந்தேகத்திற்கிடமான மரணம்) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், கிரேட்டர் ஹைதராபாத் நகராட்சியின் (Greater Hyderabad Muncipal Corporation) உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், உணவு விஷமான சம்பவம் குடியிருப்பு சூழலில் நடந்ததால், நாங்கள் விசாரணை மேற்கொள்ள முடியாது என்றும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் போன்ற வணிக நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு மட்டுமே அவர்களின் தலையீடு இருக்கும் என்றும் தெரிவித்தனர்.. இதனால் இந்த வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்..