டெல்லி கார் குண்டுவெடிப்பில் முதல் கைது.. 4 பேர் விடுவிப்பு.. என்.ஐ.ஏ. அறிக்கையில் தகவல்!
டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக முதல் கைது நடவடிக்கையை தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்டுள்ளது.
நவம்பர் 10ஆம் தேதி மாலை 6.52 மணியளவில் செங்கோட்டை சிக்னல் அருகே ஹரியானா நம்பர் பிளேட்டைக் கொண்ட காரிலிருந்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு, இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்தது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமுற்றதாகவும், 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, என்.ஐ.ஏ. அமைப்பினர் விசாரணையை தொடங்கினர்.
இந்த நிலையில், என்.ஐ.ஏ. அமைப்பினர், முக்கிய தகவல்களை அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் முதல் முறையாக இந்த குண்டுவெடிப்பை, தற்கொலை படைத் தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காஷ்மீரைச் சேர்ந்த அமீர் ரஷித் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் இவரது பெயரில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கார், IED தாங்கிய வாகனமாக மாற்றப்படுவதற்கு முன்பு வாகனத்தை வாங்க உதவுவதற்காக அவர் டெல்லிக்குச் சென்றதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். தற்கொலை தாக்குதல் நடத்திய உமர் நபி உடன் சேர்ந்து இவர் சதித்திட்டம் தீட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கான கார் டெல்லியில் வாங்கப்பட்டதாகவும், இதுவரை காயமடைந்தவர்கள் உள்பட 73 பேரிடம் விசாரணை நடைபெற்றதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. இறந்த உமர் நபியின் அடையாளம், ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராகவும், புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கும் உமர் உன் நபி என்பது தடயவியல் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நபிக்குச் சொந்தமான மற்றொரு வாகனத்தையும் NIA பறிமுதல் செய்துள்ளது, இது இப்போது ஆதாரங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று மருத்துவர்கள் உட்பட நான்கு நபர்களை (டாக்டர் ரெஹான், டாக்டர் முகமது, டாக்டர் முஸ்தகீம் மற்றும் உர வியாபாரி தினேஷ் சிங்லா) NIA விடுவித்துள்ளது. விசாரணையில் முக்கிய குற்றவாளியான டாக்டர் உமர் நபியுடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

