டெல்லி | செங்கோட்டை அருகே வெடித்த கார்.. வாகனங்கள் எரிந்து நாசம்.. 8 பேர் உயிரிழப்பு என தகவல்!
டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று வெடித்ததில் அருகில் நின்றிருந்த 3 வாகனங்கள் தீப்பிடித்தன. இதில் 8 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி செங்கோட்டை லால் கிலா மெட்ரோ நிலைய நுழைவாயில் எண் 1 அருகே கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அந்த கார், இன்று இரவு 6.55 மணியின்போது வெடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தால் அருகிலுள்ள ஐந்து முதல் ஆறு வாகனங்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
இதன் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் அருகிலுள்ள பல கடைகள் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெருவிளக்குகள் முற்றிலும் அணைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மேலும் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசாங்க வட்டாரங்களின்படி, பயங்கரவாத தாக்குதல் குறித்து இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. செங்கோட்டை பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும் நிலையில், இந்த வெடிப்புச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, டெல்லியில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர், மேலும் வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய தடயவியல் குழுக்கள் அந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றன.
முன்னதாக, இன்று காலை ஜம்மு -காஷ்மீரில் மருத்துவர் ஒருவரின் வீட்டிலிருந்து2,900 கிலோ கிராம் அளவிலான வெடிப்பொருட்கள் தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட்டது. இவர், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் எனவும் ஜம்மு -காஷ்மீர் மாநில போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் மருத்துவரின் கைது சம்பவத்திற்கும் கார் வெடிப்பு சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

