தொடர் குண்டுவெடிப்புக்கு திட்டம்.. அறை எண் 13இல் ரகசிய ஆலோசனை.. பேசுபொருளான ஹரியானா பல்கலை விடுதி!
டெல்லி குண்டுவெடிப்பு தொடர் பின்னணியில் ஹரியானாவில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு சாதாரண, புழுதி படிந்த விடுதி அறை தற்போதைய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
நவம்பர் 10ஆம் தேதி மாலை 6.52 மணியளவில் செங்கோட்டை சிக்னல் அருகே ஹரியானா நம்பர் பிளேட்டைக் கொண்ட காரிலிருந்து நிகழ்ந்த குண்டுவெடிப்பும், அதற்கு முன்னே ஃபரிதாபாத் விடுதி ஒன்றில் கைப்பற்றப்பட்ட 350 கிலோ வெடிபொருட்களும், துப்பாக்கிகளும் இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்தன. தவிர, அதைத் தொடர்ந்து அதுபற்றிய தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், இந்த இரண்டு சம்பவங்களின் தொடர் பின்னணியில் ஹரியானாவில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு சாதாரண, புழுதி படிந்த விடுதி அறை தற்போதைய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. அங்குள்ள சிறுவர் விடுதிக் கட்டடம் 17இல் உள்ள அறை எண் 13தான், பயங்கரவாத நபர்களின் ரகசிய சந்திப்பு இடமாக செயல்பட்டிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்த அறை, காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முசம்மிலுக்குச் சொந்தமானது. இந்த அறைக்குள்தான் அவர், மற்ற பயங்கரவாத செயலில் தொடர்புடைய மருத்துவர்களைச் சந்தித்து டெல்லி மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, முசம்மில் மற்றும் ஷாஹீன் கைது செய்யப்பட்ட நிலையில், உமர் குண்டுவெடிப்பில் இறந்தார். பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மற்றொரு காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் நிசார்-உல்-ஹசன் காணாமல் போயுள்ளார்.
இதற்கிடையே உண்மையில், டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு ஆண்டு நிறைவையொட்டி குண்டுவெடிப்புகள் திட்டமிடப்பட்டிருந்தன என்பது கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பல்கலைக்கழக ஆய்வகத்திலிருந்து ரசாயனங்களை விடுதி அறைக்கு எவ்வாறு வாங்குவது மற்றும் ரகசியமாக கொண்டு வருவது என்பது குறித்து இந்தக் குழு விவாதித்ததாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர். அந்த அறை சோதனையின்போது ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மின்னணு சாதனங்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும், தற்போது அது சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். மேலும், மருத்துவர்கள் உமர் மற்றும் ஷாஹீன் ஆகியோர் பல்கலைக்கழக ஆய்வகத்திலிருந்து ஃபரிதாபாத்தின் தௌஜ் மற்றும் டாகா கிராமங்களுக்கு ரசாயனங்களை கொண்டு செல்ல உதவியதாகக் கூறப்படுகிறது.
இவை வெடிபொருட்களை ஒன்று சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக, அறை எண் 13இல் கண்டுபிடிக்கப்பட்ட ரசாயனங்கள், அம்மோனியம் நைட்ரேட் மற்றும் சிறிய அளவிலான உலோக ஆக்சைடுகளுடன் கலந்து வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. உண்மையில், செங்கோட்டை குண்டுவெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய் (ANFO) பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அல்-ஃபலா பல்கலைக்கழகம் பயங்கரவாத நபர்களுக்கு துணை போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறது. தவிர, பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களில் அங்கீகரிக்கப்படாத பொருட்கள் அல்லது ரசாயனங்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை அல்லது சேமிக்கப்படவில்லை என்பதையும் அது வலியுறுத்தியுள்ளது.

