பள்ளிகளில் கட்டாய செய்தித்தாள் வாசிப்பு | உ.பி அரசு வெளியிட்ட அறிவிப்பு... காரணம் என்ன?
உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து அனைத்து அரசு பள்ளிகளிலும் செய்தித் தாள் வாசிப்பை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் (அடிப்படை மற்றும் இடைநிலைக் கல்வி) பார்த்தா சர்தி சென் சர்மா பிறப்பித்த உத்தரவில், காலை வழிபாட்டு நிகழ்வில் 10 நிமிடம் ஒதுக்கி மாணவர்கள் சுழற்சி முறையில் செய்தி வாசிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மொபைல் போன் திரைகளையே குழந்தைகள் நீண்ட நேரம் பார்த்து வரும் இன்றைய சூழலில் செய்தித் தாள்களில் வாசிக்கின்றபோது அவர்களது கவனம் அதிகரிக்கும் என்றும், செய்தித்தாள் வாசிப்பு என்பது பழக்கமாக மாறும் போது பொது அறிவு மேம்படுவதோடு போட்டித் தேர்வுகளுக்கு தயாராக பெருமளவில் உதவும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மொழிப்புலமையும், சவாலான காலங்களில் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும் என்றும் உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை அறிகின்ற மாணவர்கள் சமூகத்துடன் நல் உறவை பேண வழி ஏற்படுவதோடு, பொறுப்புள்ள குடிமகனாக வளர செய்தி வாசிப்பு பழக்கம் முக்கிய பங்காற்றும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் நூலகத்திலிருந்து எல்லா மாணவர்களுக்கும் புத்தகங்கள் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த புத்தகங்கள் மாணவர்களின் சுயதீன அறிவை மேம்படுத்தும் வகையில் கதை, நாவல், வாழ்க்கை வரலாறு போன்றவைகளாக இருக்க வேண்டும் எனவும் கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

